இலங்கையில் பிரபாகரன்கள் உருவாவதற்கு மதிப்பிற்குரிய சிங்கள மக்களே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தான் சிறு வயதில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளை பல தடவைகள் கண்டிருக்கின்றேன். இதுவே நாட்டில் பிரபாகரன்கள் உருவாக காரணமாகும்.
எனக்கு இரயில் பயணம் தொடர்பில் அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் இரயில் சேவை உள்ளது.
அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும், தனது பெற்றோர், அப்போது சிறுவர்களாக இருந்த தம்மை அழைத்துக்கொண்டு பொலனறுவை ரயில்வே நிலையத்திற்கு செல்வார்கள்.
அப்போது கொழும்பிற்கு பயணிப்பதற்காக சுமார் 400, 500 பேர் வரையில் இரயில் நிலையத்தில் குவிந்திருப்பார்கள். அந்த இரயில் மட்டக்களப்பிலிருந்து புறப்படும்.
மட்டக்களிப்பிலிருந்து புறப்படும் ரயிலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் நிறைந்திருப்பார்கள்.
பொலனறுவையில் ரயிலில் ஏறும்போது தமக்கு ஆசனங்கள் இருக்காது.
அப்போது சிங்கள மக்கள் என்ன செய்தார்கள்? ஆசனங்களில் சிறு குழந்தைகளுடன் உறக்கத்தில் இருக்கும் தமிழ் மக்களை அடித்து துரத்திவிட்டு அந்த இருக்கைகளில் சிங்கள மக்கள் அமர்ந்துகொள்வார்கள்.
இதனை தான் ஒருநாளோ, இரண்டு நாட்களோ பார்க்கவில்லை. பல தடவைகள் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது பயத்தில் ‘ஐயோ சாமி’ என கத்திக்கொண்டு, அழுதுகொண்டு மலசலகூடங்களிலும் மறைவான இடங்களிலும் சிறு குழந்தைகளுடன் தமிழ் மக்கள் ஒளிந்துகொள்வார்கள்.
மதிப்பிற்குரிய சிங்கள மக்கள் அந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு உறங்குவார்கள். இவ்வாறுதான் பிரபாகரன்கள் உருவானார்கள்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.