பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் கோட்டா சீனிவாச ராவ், உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். உடல்நிலை குறைவு காரணமாகத் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டா சீனிவாச ராவ் ஒரு பார்வை:
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கில் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துப் பிரபலமானவர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்குத் தமிழில் இதுதான் முதல் படம்.
தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ எனப் பல படங்களில் நடித்துத் தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர்.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.
திரையுலகினர் இரங்கல்:
இந்நிலையில், இவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
