Breaking
Mon. Nov 25th, 2024

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தலை நடத்தி ஸ்தீரமான  உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் புதிய மக்கள் குடியேற்ற கிராமமான ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தை பிரதான வீதி ஒரு கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு என்பன சனிக்கிழமை (09) நடைபெற்றது. இதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

மக்கள் பாரிய எதிர்பார்ப்போடும் – நம்பிக்கையோடும் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வாக்களித்தனர். ஆனால், அந்த அரசின் பிரதானியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை. மத்திய வங்கி கொல்லையின் ஊடாக நாட்டின் பொருளாதாரம் சூரையாடப்பட்டது. 150 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 182 ரூபாவாக உயர்கின்ற அளவு நாட்டின் பொருளாதாரம் நளிவடைந்துள்ளது.

உணவுப் பொருட்கள், எரி பொருட்கள் என அத்தியவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் மது, போதைப் பொருள் பாவனை, பாதால உலக கோஷ்டிகளின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் செய்யத்தவறியது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுமில்லை, வருமையை போக்க வழி செய்யவும் இல்லை.

வடகிழக்கு மாகாணங்களில் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தீர்மானித்தது. அப்போத அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நான் இருந்தேன். ஒரு வீடு 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்து. 50ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு தேவையான நிதியினையும் நாம் பெற்றிருந்தோம்.

வடகிழக்கு மாகணங்களில் யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமக்கான வீடுகளை கட்டித்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.  எனவே, 2017ஆம் ஆண்டில் 10 ஆயிரம் வீடுகளையும், 2018இல் 15 ஆயிரம் வீடுகளையும், 2019இல் 25 ஆயிரம் வீடுகளையும் குறித்த ‘50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின்’ ஊடாக அமைக்க உலக வங்கி 2016ஆம் ஆண்டு நிதி வழங்கியது. எனினும், இத்திட்டம் தொடர்பில் முறண்பாடுகள் ஏற்பட்ட போது பிரதமர் ரணில் தெளிவான – உறுதியான தீர்மானங்களை  எடுக்காததன் காரணமாக இன்னும் ஒரு வீட்டைக் கூட எம்மால் கட்ட முடியவில்லை.

இதனால் கோடிக்கனக்கான நிதி அப்படியே முடங்கிக்கிடக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளை போக்க நாங்கள் முயற்சிக்கின்ற போது பொறுத்து வீடா? , கல் வீடா? என்ற பிரச்சினை எழுந்தது. இது தொடர்பில் பிரதமர் தெளிவான முடிவை எடுக்காததன் விளைவாக கடந்த மூன்றரை வருடங்களில் ஒரு வீட்டைக் கூட எம்மால் கட்ட முடியவில்லை.

ஆகவே, தேவையான சந்தர்ப்பங்களில் உறுதியான – தெளிவான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைமைத்துவம் அவசியம். வடகிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க கூடிய தலைமைத்துவம் அவசியம். மாறாக இன்னொரு சமூகத்தின் மீது தினிப்புக்களை கொண்டு வந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படும் தலைமைத்துவங்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

எனவே, ஜனாதிபதி பிரதமரை நீக்கி விட்டு சில தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பொதுத் தேர்தலை நடத்துவதே தீர்வாக அமையும். யார் ஆட்சியமைத்தாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது. ஆகவே, ஒரு ஸ்தீரமான – நிலையான அரசாங்கம் உருவாக வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய உறுதியான ஒரு அரசாங்கம் அமைகின்ற போதுதான் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். தடைப்பட்ட வீட்டுத் திட்டத்தை கொண்டு செல்ல முடியும். வெளிநாட்டு நிதி வளங்களை கொண்டு வர முடியும். நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன ரீதியாக முறண்பாடுகளை கலைய முடியும். இவற்றை செய்வதாக இருந்தால் பொதுத் தேர்தலை நடத்தி உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும்.

ஆகவே, பொதுத் தேர்தலின் ஊடாக மட்டும் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அது தொடர்பில் நாங்களும் உறுதியாக உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள  அரசியல் பிரச்சினைகள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சுமுகமான நிலைக்கு கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. – என்றார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *