கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற வருமையை ஒழித்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஏழை விவசாயிகளுக்கு மாடுகளை இலவசமாக வழங்கி அதன் ஊடகாக பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இலங்கையின் தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த விசேட திட்டத்துக்கு இந்தியாவின் கேரள மில்மா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாhவின் தமிழ் நாட்டில் மிகப்பிரபலமான கேரள நிறுவனமான மில்மா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.டி. தோமஸ் தலைமையிலான குழுவினருக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் இன்று புதன்கிழமை அமைச்சின் காரியாலயத்தில் இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் தேசிய பால் உற்பத்தியை அதிகரித்தல், மட்டு. மாவட்டத்தில் இருக்கும் வருமை நிலையை ஒழித்தல் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மில்மா நிறுவனத்தின் தலைவரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்விடுத்திருந்தார். 

அதற்கமைய இன்று இது தொடர்பிலான இரு தரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது, இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழை விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக மாடுகளை வழங்குவதற்கும் அதன் ஊடாக தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கும் மில்பா நிறுவனத்தில் முகாமைத்தவ பணிப்பாளர் இணக்கம் தெரிவித்தார். அத்துடன், பால் உற்பத்தி தொடர்பான தொழிநுட்ப அறிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றினை நிறுவுவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வருமை நிலையை ஒழிப்பதற்கும், இளைஞர்- யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் மேலும் சில இந்திய நிறுவனங்களுடன் இராஜாங்க அமைச்சர் பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில், இந்திய பி.எம்.ஜி. குளோபல் நிறுவனத்தின் தலைவர் தன்வீர் கபூர், ‘நோர்மண்டி ஒகஸ்டின்’ நிறுவனத்தின் தலைவர் ஒகஸ்டின் லிபின், இந்திய சிங்ஹானியா நிறுவனத்தின் சர்வதேச ஆலோசகர் ரிப்பில் ஹம்ஸா மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவஹர் சாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.