வெல்லம்பிட்டி பகுதியில் முஸ்லிம் பட்டதாரி பெண் ஒருவரின் வீட்டுக்குள் பொதுபலசேனா அமைப்பைச்சேர்ந்த டான் பிரசாத் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளார். கடந்த புதன் கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தனியார் நிறுவனமொன்று அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய வகை பால்மா தொடர்பிலான விளம்பர விரிவாக்கல் பணியொன்றை முஸ்லிம்களுக்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த முஸ்லிம் நிறுவனத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழிநுட்பப் பிரிவில் பயின்று பட்டம்பெற்ற இளம் முஸ்லிம் பெண் பணியாற்றும் நிலையில், அவர் குறித்த நிறுவனத்தின் விரிவாக்கல் மற்றும் விளம்பர நோக்கில் சில விபரக் கொத்துகளை அருகிலுள்ள வீடுகளுக்கு விநியோகித்துள்ளார். இதனை இனவாத நோக்குடன் கண்ணுற்ற ஒருசிலர் பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினரான டான் பிரசாத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்தே நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் டான் பிரசாத் கடந்த புதன்கிழமை மாலை குறித்த பட்டதாரி பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளார். இதனையடுத்து பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் டான் பிரசாத்துடன் வந்த இனவாதக் கும்பல் குறித்த பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு இரவு முழுவதும் அச்சுறுத்தலாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெல்லம்பிட்டி பொலிஸில் குறித்த பட்டதாரி பெண் பணி புரியும் நிறுவனத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து அன்றிரவு அப்பெண்ணின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதேவேளை, மறுநாள் காலை பொலிஸ் விசாணைகளும் இடம்பெற்றன. பொலிஸ் நிலையத்தில் வைத்தும் டான் பிரசாத் குழுவினரால் பட்டதாரி பெண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளையடுத்து விவகாரம் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.