விபத்திற்குள்ளான பாலஸ்தீனப் பெண்ணின் கைக்குழந்தைக்கு யூதப்பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கைக்குழந்தையுடன் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்ற கார் விபத்திற்குள்ளானது.
விபத்தில் அந்த பெண் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவரின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களின் பச்சிளங் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பியது.
படுகாயமடைந்த பாலஸ்தீனப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே பசி தாங்க முடியாமல் அக்குழந்தை அழத் தொடங்கிவிட்டது. குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. இதனால் பசியில் துடிக்கும் குழந்தைக்கு செவிலி போத்தலில் பால் கொடுக்க முயன்றுள்ளார்.
ஆனால், அதைக் குழந்தை குடிக்க மறுத்துவிட்டதால், அவரே அந்த குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்தக் காட்சியைப் பார்த்த குழந்தையின் உறவினர்கள் கண்கலங்கி குறித்த செவிலிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் யூத இனத்தவரான உலா என்ற பெயருடைய அந்த செவிலி, பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்குப் பாலூட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.