கட்டுரைகள்பிரதான செய்திகள்

பாலமுனை மாநாட்டுக்கு முன் கதிரை காலியாகுமா?

(மொஹமட் பாதுஷா)

தேசிய அரசியலில் பாரிய கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படப் போகின்ற ஒரு காலகட்டத்தில், எத்தனையோ விடயங்களை முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சாதித்துக் காட்டுவர் என்ற நினைப்பில், முஸ்லிம் மகா ஜனங்கள் இருக்கின்றனர். சமகாலத்தில், பாலமுனையில் தேசிய மாநாட்டை நடாத்துவதற்கான வேலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மும்முரமாகவுள்ளது.

தேசியத் தலைவரும் பிராந்திய தளபதிகளும் மடித்துக் கட்டிக் கொண்டு அம்பாறை மாவட்ட களத்தில் இறங்கியுள்ளனர். பேராளர் மாநாட்டை தொடர்ச்சியாக நடத்திவருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், பல வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் ஒரு தேசிய மாநாட்டை நடத்துகின்றது. தேசிய மாநாட்டை எவ்வழியிலேனும் இவ்வருடம் நடத்தியே தீரவேண்டிய தேவைப்பாடு எதனால் உருவாகியுள்ளது என்பதையும், ஆழமாக நோக்குவோர் அழகாகப் புரிந்து கொள்வர். புதிய அரசியலமைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனச் சர்ச்சை, தனி முஸ்லிம் மாகாண கோரிக்கை, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் போன்றவற்றுக்கும், மு.காவின் தேசிய மாநாடு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறுவதற்கும் இருக்கின்ற சின்னச்சின்ன சம்பந்தங்கள் பற்றி இக்கட்டுரை பேசப் போவதில்லை.

இன்னுமொரு விடயத்தை பேசப் போகின்றது.  கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே மு.கா தலைமை இருந்தது. தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் வரைக்கும் இந்நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவும் இல்லை. ரவூப் ஹக்கீம் ‘எதை’ எதிர்பார்த்தாரோ அது மஹிந்தவிடம் இருந்து கிடைத்துக் கொண்டே இருந்ததால், அவருக்கு அங்கிருந்து பொது எதிரணியின் பக்கம் வரவேண்டிய எந்த அவசியமும் இருக்கவில்லை. ஆனால், கடைசியில் செயலாளர் போன்ற சிலரின் விடாப்பிடியால்; மக்களின் பக்கம் வரவேண்டியதாயிற்று. இருப்பினும், அவர் எவ்வளவு மனவருத்தத்துடன் மஹிந்தவின் உறவை முறித்துக் கொண்டார் என்பது, மஹிந்தவுக்கு அவர் எழுதிய கடைசிக் கடிதத்தின் வரிகளில் தெரிந்தது. இப்படி, மக்கள் எடுத்த முடிவின் காரணமாகவே வெற்றிபெறும் பக்கத்தில் நிற்கும் வாய்ப்பு ரவூப் ஹக்கீம் தலைமையிலான மு.காவுக்கு கிடைத்தது. இதில் அவருடைய சாணக்கியம் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை.

அதற்குப் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தனித்தும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. இத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலேயே மு.கா பெரு வெற்றியீட்டியது. திருகோணமலை மாவட்டத்தில் மு.கா, ஏற்கெனவே கோட்டையை இழந்து விட்டிருந்ததும், மட்டக்களப்பில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததையும் ஓரளவுக்கு தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. ஆனால், அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த 3 நாடாளுமன்ற உறுப்புரிமையையை வைத்துக் கொண்டு, நிலைமையை அக்கட்சி சமாளித்துக் கொண்டது.

இத்தேர்தலுக்காக, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.தே.க. ஊடாக பெயரிட்ட போது, 5 பேரின் பெயர்கள் போடப்பட்டன. மு.காவின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத், கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர், தலைவர் ஹக்கீமின் சகோதரர் ஹபிஸ், சட்டத்தரணி சல்மான் ஆகியோரே அவ்வாறு பெயரிடப்பட்டவர்களாவர். இவ்விடயத்தில், தற்செயலாக இடம்பெறுவது போன்ற பாணியில் பெரிய காய் ஒன்றை நகர்த்தினார் ஹக்கீம். கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் மூவருக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி கிடைக்காத விதத்திலான சூழமைவுகளை ஏற்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடம் தருவதாக நம்பிக்கை ஊட்டிவிட்டு, அவர்களது ஊரிலேயே இன்னும் ஒவ்வொரு வேட்பாளரை நிறுத்திவிட்டு, பின்னைய நாட்களில் ‘ஒரு ஊருக்கு இரண்டு எம்.பி கிடையாது’ என்ற கதையாடலைத் தொடங்கினார்.

ஏறாவூரிலும் கல்முனையிலும் நிந்தவூரிலுமாக மூவர், பகிரங்கமாக எம்.பி பதவி கேட்டு சண்டைபிடிக்க முடியாத தர்மசங்கடத்துக்குள் இப்படித்தான் சிக்க வைக்கப்பட்டனர். தேர்தல் முடிந்த பிற்பாடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டிருந்தன. அப்போது ஐ.தே.கட்சியூடாக கிடைக்கப் பெற்ற இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் ஒரு சாணக்கியமான தலைமை என்ன செய்திருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்காவது, தேசியப் பட்டியலில் பெயர் போடப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

அல்லது, யாருக்கு, எந்த ஊருக்கு அதை வழங்க வேண்டுமென்று தலைவர் நினைக்கின்றாரோ, அவரின் பெயரை முன்கூட்டியே பட்டியலில் போட்டிருக்க வேண்டும். எங்கெங்கு அரசியல் அதிகாரம் கிடைக்காமல் போகும் என்பதை முன்னரே அனுமானிக்க முடியுமாகையால், அவ்வாறான பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களை பெயரிட்டிருக்க வேண்டும். அதை மு.காதலைமை செய்யவில்லை. அட்டாளைச்சேனை போன்ற ஊர்களுக்கும் ஒரு சில தனிநபர்களுக்கும் தேசியப் பட்டியலை காட்டி, வாயூற வைத்துக் கொண்டிருந்த ரவூப் ஹக்கீம், அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒருவரது பெயரைக் கூட பட்டியியலில் போடுவதற்கு மறந்திருந்தார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நேரடி அரசியலோடு தொடர்பே இல்லாத தனது சகோதரரையும் தனக்கு நெருக்கமான சல்மானையும் பெயரிடுவதற்கு அவர் மறக்கவேயில்லை.

இதிலுள்ள உட்கருத்து என்னவென்றால், தேசியப் பட்டியலில் கட்சியின் போராளிகளான வேறு இருவரின்  பெயர்களைப் போடுவதற்கு இருந்த வாய்ப்பை தந்திரமாக அவர் எடுத்துக் கொண்டார். மு.காவுக்கு, இரண்டுக்கு அதிகமான  தேசியப் பட்டியல் எம்.பிகள் கிடைக்க மாட்டாது என்பது நன்றாக தெரிந்திருக்க, செயற்கையான ஒரு போட்டியை ஊர்களுக்கு இடையில் ஏற்படுத்திவிட்டு, அந்நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைக் காரணம் காட்டி, தனது விருப்பத்துக்குரிய இருவரை எம்.பியாக நியமிப்பதிலும் அவர் வெற்றிகண்டார் என்பதே உண்மையாகும்.

இந்த சூட்டைத் தணித்து, கட்சியின் முக்கியஸ்தர்கள் அல்லது குறிப்பிட்ட பிரதேச மக்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்வதற்கு மு.கா தலைமை உண்மையிலேயே விரும்பியிருக்குமாயின், பட்டியலில் போடப்பட்ட மற்றைய மூவரில் இருவருக்கு சில மாதங்களுக்கு அப்பதவியை வழங்கி இருக்கலாம். சட்டத்தரணி அன்றேல், பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிலையில் ஒப்பம் வாங்கிவிட்டு அதைச் செய்திருக்க முடியும். ஆனால், ஹக்கீமின் ‘நம்பிக்கையானவர்கள்’ என்ற பட்டியலில் ஹபிஸும் சல்மானும் இடம்பிடித்திருந்தாலும் கட்சிக்காக பாடுபட்ட ஹசன் அலி, பஷீர் போன்ற மற்றவர்கள், ஹக்கீம் நினைக்கின்ற நம்பிக்கையை பெற்றிருக்கவில்லை.

இதன்மூலம் மூத்த போராளிகளுக்கு மு.கா தலைமை ஒரு மறைமுக செய்தியைச் சொன்னது. இவ்வாறான களச்சூழலோடு இருவர் எம்;.பி.களாக நியமிக்கப்பட்டனர். இதனை மு.காவின் எந்த உயர்பீட உறுப்பினரும் பகிரங்கமாக தட்டிக் கேட்கவில்லை. அக்கட்சியின் எந்த எம்.பியும் மாகாண சபை உறுப்பினரும் நியாயத்துக்காகப் போராடவில்லை. மாகாண சுகாதார அமைச்சை ஏ.எல். நசீருக்கு வழங்கியும் கட்சியின் உயர்பீடத்தில் பதவிகளைக் கொடுத்தும் கொஞ்சமாக இருந்த எதிர்ப்பலையை லாவகமாகச் சமாளித்தார் ஹக்கீம். தேர்தல் காலம் இல்லை என்பதால், மக்களும் இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

இவ்வாறிருக்கையில், சுமார் ஐந்து மாதங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீஸ் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். ‘தற்காலிகம்’ என்று நோக்குகின்ற போது இது கூட அதிக காலம்தான் என்றபோதும் ஒப்பீட்டளவில் அவர் பரவாயில்லை. இந்தச் சமூகத்தில், அவர் தனது நேர்மைத்தன்மையை, கௌரவத்தை சற்று காப்பாற்றிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு வெற்றிடமாகிய பதவிக்கு திருமலை தௌபீக் நியமிக்கப்பட்டார். முன்பெல்லாம், பல ஊர்களுக்கு எம்.பி தருவதாக சொன்ன ரவூப் ஹக்கீம், அப்போது ‘அரசியல் அதிகாரமற்ற இடங்களுக்கே எம்.பி’ என்ற தாரக மந்திரத்தை அறிவித்தார். இதன்மூலம் எம்.பிகேட்ட பலருக்கு அவர் ‘தரமாட்டேன்’ என்ற சமிக்கையை அளித்தார்.

ஆனாலும், அதில் ஒரு நியாயம் இருக்கின்றது. மு.கா கட்சியை கட்டியெழுப்புவதற்காக திருமலைக்கு ஒரு தேசியப்பட்டியல் எம்.பியை வழங்கியது மாதிரி வன்னிக்கு வழங்கினாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்கும். ஆனால், இந்த நிமிடம் வரைக்கும் அப்பதவியை சல்மான் இராஜினாமா செய்யவும் இல்லை, ஹக்கீம் அதற்கான பணிப்புரையை விடுக்கவும் இல்லை. சல்மானின் விடயத்தில் ‘தற்காலிகம்’ என்பது ஏழெட்டு மாதங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் மக்களுக்குரியது. குறிப்பாக, அக்கட்சியின் கோட்டையாக இன்றும் இருக்கின்ற அம்பாறை மாவட்ட மக்களுக்கு இதில் கணிசமான உரித்து இருக்கின்றது.

அப்படியிருந்தும், இத்தேசியப்பட்டியலை நியாயமான ஒருவருக்கோ அல்லது பிரதேசத்துக்கோ நிரந்தரமாக கொடுக்காமல் வைத்திருப்பது மிக மோசமான நிலைமையாகும். கட்சிக்காக பாடுபட்ட போராளிகள், மக்கள் எல்லாம் எங்கோ இருக்க, கிடைத்த பதவியை யாருக்கோ கொடுத்திருப்பதானது. ஊரார் கோழியை அறுத்து, உற்றார் உறவினர்களுக்கு விருந்து வைப்பது போன்றது என்றே மக்கள் பேசிக் கொள்கின்றனர். இவ்வளவையும் செய்து விட்டு, அப்பதவியை இராஜினாமாச் செய்ய வைக்காமல் இருந்து கொண்டு. இப்போது அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் வருவதற்கு மு.கா தலைமை வெட்கம் கொள்ள வேண்டும். யாருடைய முயற்சியினாலோ கிடைத்த எம்.பியை, தான் வைத்துக் கொண்டிருப்பதற்கு சல்மானுக்கு உறுத்தலாக இருக்க வேண்டும்.

உண்மையாகவே, தேசிய மாநாடு ஒன்றை அம்பாறை மாவட்டத்தில் நடாத்துவது நல்லதே. அதற்காக, மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை மனம் திறந்து பாராட்டவே வேண்டும். ஆனால், குர்ஆனையும் ஹதீஸையும் வைத்துக் கொண்டு கட்சி நடாத்துவதாக கூறுகின்ற தலைமை, இவ்விடயத்தில் இந்த சமூகத்துக்கு அநியாயமிழைத்ததையும் இன்னும் அநியாயமாக நடந்து கொள்வதையும் மறைக்க முடியாது. ‘இதோ இராஜினாமா செய்ய வைக்கப் போகின்றேன்’ என்ற தோரணையில் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்த ரவூப் ஹக்கீம், தேசியப்பட்டியலின் 2ஆவது நிரந்தர எம்.பி தொடர்பாக அண்மைய நாட்களில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மக்களுக்காக வழங்கப்பட்ட எம்.பி பதவிகளை மக்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்காமல், தனக்கு வேண்டிய ஆட்களுக்கு வழங்கியது ஒருபக்கமிருக்க, இரண்டாவது எம்.பியை இராஜினாமா செய்ய வைக்காமல், அதுபற்றி ஒருவார்த்தையேனும் கூறாமலும், அம்பாறையில் தேசிய மாநாட்டு வேலைகளை செய்வதற்கு வந்திருக்கின்றார் என்றால், அவர் மக்களை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்றுதானே அர்த்தம்? என்ன சுத்துமாத்து வேலைகள் பார்த்தாலும் மக்கள் அதை மறந்து விடுவார்கள் என்ற தலைமையின் மனோநிலையைதானே இது காட்டுகின்றது? தலைமை என்ன செய்தாலும், தளபதிகள் எப்படிப் போனாலும், எழுச்சிப் பாடலை போட்டு மக்களை வழிக்கு கொண்டு வரலாம் என்று ஹக்கீம் நினைத்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் தலைவர், அம்பாறை மாவட்டத்தில் உலா வந்தவேளையிலும் மக்கள் சந்திப்புக்களிலும் தலைவரிடம் பொது மக்கள் கேட்ட கேள்விகளில் இருந்து, மக்கள் சுரணை அற்றவர்கள் அல்லர் என்பதை இலகுவாகவே புரிந்து கொள்ள முடியும். தேசியப்பட்டியல் எம்.பி பதவியை யாருக்கு கொடுப்பதென்பது இரண்டாவது பிரச்சினை. அதற்கு முன்னர் சல்மான் எம்.பியை பதவி விலக்கி, அப்பதவியை காலியாக்க வேண்டும். பாலமுனையில் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ள தேசிய மாநாட்டுக்கு முன்னர் இது இடம்பெற்றால் தலைமை பல சங்கடங்களை தவிர்க்கலாம். அன்றேல், சாணக்கியம் சறுக்கிப் போகலாம்.

Related posts

பொதுபல சேனா அமைப்புடன் தௌஹீத் ஜமாத்தை ஓப்பீட்டு பேசிய அமைச்சர் ஹக்கீம்

wpengine

தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. யுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவேன் : பிரதமர்

wpengine

சாக்கடை அரசியலுக்காக குடும்ப உறவுகளை பிரிக்கும் அமைச்சர் ஹக்கீம்

wpengine