பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குளியாப்பிட்டிய, வயம்ப விஸ்வாலோக வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் அந்த பாடசாலையின் ஆசிரியை ஒருவரும் இவ்வாறு தாக்கப்பட்டதாகவும், அவர்கள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (11ம் திகதி) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியின் சிறிய தந்தையும் அவரது மனைவியும் ஏதோ காரணத்திற்காக அதிபரை சந்திக்க வந்து அதிபர் அறையில் கலந்துரையாடி கொண்டிருந்த போது சிறிய தந்தை தான் வைத்திருந்த தலைகவசத்தால் அதிபரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மோதலை தடுப்பதற்காக பாடசாலையின் ஆசிரியை ஒருவர் முற்பட்ட போது அவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் அதிபரும் ஆசிரியையும் குளியாப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.