பாடசாலைகளை விட்டுச் செல்லும் மாணவர்கள் குறித்து முறையான தரவு அறிக்கை ஒன்றைத் தயாரித்து, அவர்களுக்கு இலவசப் பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் மஹரகம பிரதேச செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது பணிப்புரையை விடுத்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர கல்வியை முடித்து பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகள் அடுத்தகட்ட கல்வியைப் பெறவில்லை என்றால், அவர்கள் தங்களது தனிப்பட்ட முன்னேற்றத்தை இழக்க நேரிடும் அதே நேரம் அது சமூக பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. சாதாரண தரம் வரை அல்லது உயர்தரம் வரை பாடசாலையில் பதிவு செய்யப்பட்ட பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமானது எனவும், இந்த பிள்ளைகள் பரீட்சைகளுக்கு தோற்றாமல் வெளியேறும் விதம் மற்றும் எந்த காரணத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்பதனை கண்டறிவது மிகவும் அவசியமானது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தொழில் பயிற்சிக்கு வழிநடத்துவதும், வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வழிகாட்டுவதும், இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு அவர்களை வழிநடத்தி அவர்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அனைவரின் பொறுப்பாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் பிக்குகள் வாட்டு மூடப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், பிக்குகள் வார்டை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான உபாலி கொடிகார, சுலோச்சன கமகே, மஹரகம பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.