பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டம்
பாகிஸ்தானிய அரசாங்கம் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவம் உட்பட ஏனைய துறைகளுக்கான மாணவர்களை தெரிவு செய்து புலமைப்பரிசில் வழங்கி, பாகிஸ்தானின் முன்னோடியான பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றது.
அதனடிப்படையில் இவ்வருடத்திற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அம் மாணவர்களிலிருந்து புலமைப்பரிசில்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சை வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாகிஸ்தானின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் இரண்டாம் நிலை செயலாளர் (அரசியல் பிரிவு) ஆயிஷா அபூபக்கர் பஹட் , பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழுவின் திட்டப்பணிப்பாளர் ஜெகன்செப் கான் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.
இத் தெரிவுப் பரீட்சையானது கடந்த காலங்களில் கொழும்பு பிரதேசத்திலேயே நடாத்தப்பட்டு வந்தது. ஆனால் இவ்வருடம் எமது பிரதேச மாணவர்களினது நலனைக் கருத்தில் கொண்டு இந்தப்பிரதேசத்திலேயே நடாத்தப்பட்டமை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
இதற்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசிர் அஹமட் (எம்.பி) அவர்களுக்கு பாகிஸ்தானின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் இரண்டாம் நிலை செயலாளர் (அரசியல் பிரிவு) ; ஆயிஷா அபூபக்கர் பஹாட் அவர்கள் நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் பரீட்சையை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்ட பாகிஸ்தானிய தூதரகத்திற்கு ஹாபிஸ் நசிர் அஹமட் எம்பி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.