புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் ரூ. 35,000 தண்டம் நீதிமன்றினால் இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் பழுதடைந்த அரிசியை கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 22ஆம் திகதி வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன், விஸ்வமடு பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேந்கொண்டிருந்தனர். இதன்போது திகதி காலாவதியான 700kg அரிசி, பிஸ்கட் பைக்கட்டுகள் கைப்பற்றப்பட்டிருந்தது.
காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிரபல விற்பனை நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக இன்று முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் றொய்ஸ்ரன் மற்றும் சந்திரமோகன் ஆகியோரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன் போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் ரூ. 35,000 தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.