பிரதான செய்திகள்

பள்ளிவாசல் மீது தாக்குதல்: துரித விசாரணை நடத்த வேண்டும்

குருநாகல், நிக்கவரெட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நிக்கவரெட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தையும் – கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் ஒருவாரத்துக்குள் இரண்டு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பத்திலேயே கடுமையான முறையில் தடுக்கப்பட்டு, நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் கடந்த காலங்களைப் போன்று நாடு பூராகவும் பள்ளிவசால்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் அபாயம் உள்ளது.

தமது மதக்கடமைகளை அமைதியாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ள வேண்டும், இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற காரணங்களுக்காகவே முஸ்லிம்கள் நல்லாட்சி அரசை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருந்தனர்.

நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் எதிர்பார்த்த சூழல் உருவாகியது. எனினும், இதனை சீர்குலைக்கும் வகையில் இனவாத சக்திகள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

சிங்கள தேசிய வாத அமைப்புக்கள் மீண்டும் சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இது அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதகமாகவே அமையும். அத்துடன், நல்லாட்சி அரசுக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும்.

நல்லாட்சி அரசின் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது குறைய ஆரம்பித்துள்ளன. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான சம்பவங்களை அரசினால் கட்டுப்படுத்த முடியும். எனவே, பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட விஷமிகள் யார் என்பது கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் சிரமம்

wpengine

மன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு! அனர்த்த நிலையம்

wpengine

மன்சூரின் காடைத்தனம் இனியும் செல்லாது.

wpengine