கூட்டு அரசு இந்த வருட ஆரம்பத்திலிருந்து பல விதமான அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, பிரதமரான ரணில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையிலான இரு பெரும் தேசியக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்கள் காலமாக கூட்டு அரசை நாட்டில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தாலும், அது பலவீனமுள்ளதொரு அரசாக இருக்கின்ற படியால் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்புகளுக்கும் பஞ்சமில்லாதிருக்கின்றது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிளவுகள், ஜனாதிபதியைக் குழப்பமானதொரு நிலைக்கு இட்டுச் செல்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டு, முதன்மை எதிர்க்கட்சியாகச் செயற்பட்டாலும், முன்னைநாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியே பலமானதொரு எதிர்க்கட்சி போல் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது.
ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய முக்கியமான கடப்பாடு கொண்டவராக இருக்கின்றார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஆட்சி மாற்றம் தேவை என்ற விதத்தில் இந்தியா உட்பட மேற்குலகம் மாற்றமொன்றை எதிர்பார்த்திருந்தது.
தென்னிலங்கை மக்களில் ஒரு தரப்பினரும், தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலோரும் மகிந்தவின் அரசை வீட்டுக்கு அனுப்புவதில் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். அதன் அடிப்படையில் மக்களின் விருப்பப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது நாற்பது மாதங்கள் கடந்துள்ளன.
இடைப்பட்ட இந்தக் காலப்பகுதியில், அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதன்மை எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயற்படுகிறது.
இன்றைய நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் பிரதான பெரும்பான்மையினத்தைச் சார்ந்த இரு கட்சிகளின் கூட்டாட்சி மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையைத் தற்போது அவர்கள் படிப்படியாக இழந்து வருகின்றனர்.
ஊழல் மோசடியை ஒழிப்போம் என்ற பரப்புரை வாசகத்தை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தீர்க்கப்படாத நிலையில், கூட்டு அரசிலும் ஊழல் மோசடிகள் மலிந்து விட்டன என்ற குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி உட்பட இரு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களாலும் முன்வைக்கப்பட்டதையடுத்து, அரசின் உறுதித் தன்மை பின்னடைவு கண்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து கூட்டு அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒருவர் மீது ஒருவர் சீறிப் பாய்வதும், காறி உமிழ்வதும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதுமாக அமைதியற்ற சூழலை நாடாளுமன்றில் ஏற்படுத்தி வந்தனர்.
நாடாளுமன்றக் கூட்டங்களும் குழப்பமும் கூச்சலுமாக அமைந்தன. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்கள், தர்க்க வாதங்கள், தகாத வார்த்தைப் பயன்பாடுகள் ஆட்சியாளர்கள், எதிர்தரப்பு அரசியல்வாதிகள் ஆகிய தரப்பினர்களால் தாராளமாக மேற்கொள்ளப்பட்டு கருத்து முரண்பாடுகள் உச்சத்துக்குச் சென்றிருந்தன.
மகிந்த தலைமையிலான எதிரணிக்கட்சிகள், கூட்டு அரசை நிம்மதியாக ஆட்சி நடத்த விடாது இடையூறுகளையும், அழுத்தங்களையும் உள்ளேயும், வௌியேயுமிருந்து கொடுத்த வண்ணமிருந்தன.
அரசு மீது பலத்த கண்டனங்களைத் தெரிவிப்பதுடன், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதில் தாம் ஒருபோதும் சளைத்தவர்களல்ல எனக் காட்டிக் கொண்டு, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண் டிருந்த மகிந்த ராஜபக்ச ‘‘இந்த அரசை வீட்டுக்கு கூடிய சீக்கிரமே அனுப்பி வைப்போம். எமது ஆட்சியை மீண்டும் அமைப்போம்’’ என அடிக்கடி சூளுரைத்து வந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்த லில் மகிந்த தலைமையிலான பொது மக்கள் முன்னணி அதிகமான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி பெருவெற்றியைப் பெற்றது.
மகிந்த ராஜாபக்ச அணியினர், மக்கள் ஆதரவு தங்கள் பக்கமேயிருப்பதாக உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், தொடர்ச்சியாக கூட்டு அரசுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தத் தயாராயினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ. தே. கட்சி என்பவற்றுக்கு உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையும், அதன் தொடர்ச்சியாக அவ்விருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும், மகிந்த தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு, பிரதமர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து ரணிலை பதவியிறக்கச் செய்யவும், மேலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுகின்ற சூட்சுமமான திட்டத்தையும் தயாரித்து வைத்திருந்தாலும், இறுதியில் ரணில் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி கண்டமையால் மகிந்த தமது அந்தத் திட்டத்தில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.
கூட்டு அரசு 40 மாதங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததாலும், முன்னாள் அரசுத் தலைவரான மகிந்த ராஜபக்ச, கூட்டு அரசின் கொள்கை வகுப்பாளராக இருக்கின்றாரா? என்ற சந்தேகம் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படாமலில்லை.
தென்னிலங்கையில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழர்களினது பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சி யாவும் தற்போது ஓரம் கட்டப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தலைமைகளும் தமது இருப்பைத் தக்க வைக்க அரசுக்குத் துணை போகும் விதத்தில் தங்களது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களுடைய விடயத்தைப் பொறுத்தவரை யில் அரசு வழங்குகின்ற வாக்குறுதிகள் யாவும் காற்றோடு காற்றாக கலைந்து போய்விடுகின்றன.
கூட்டு அரசு, தனது பதவிக் காலத்தில் பாதியைக் கடந்து முடித்து விட்டாலும், அரசின் போக்கானது, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தையும், விரக்தியையும் உருவாக்கி விட்டது.
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் மீளெழுச்சி என்பது, கூட்டு அரசுக்குப் பெரும் பின்னடைவையும், வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி தமிழ் மக்கள் மீதான அவரது பார்வையும், கரிசனையும் குறைந்துள்ள தென்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
மகிந்த தரப்பின் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் வெற்றி , மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பாதிப்படையச் செய்துள்ளதுடன், ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் அது சுதந்திரக் கட்சியை மேலும் பிளவுபட வைத்துள்ளது. மகிந்தவின் சூழ்ச்சி அரசியல் வியூகம், கூட்டு அரசுக்கு நிம்மதியற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கூட்டு அரசைத் தூக்கி எறிவோம் என்று மகிந்த தலைமையிலான எதிரணிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து போர்க்கொடி தூக்கியிருந்தன. போராட்டங்கள் பலவற்றை நடத்தியிருந்தன.
மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற புதிய கட்சியான சிறிலங்கா பொது மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் பெரியதொரு வெற்றியைப் பெற்றுக் கொண்ட பின்னர், கூட்டு அர சுக்கு தலையிடியாகவே இருப்பதனால், மக்களின் விரக்தியும், வெறுப்பும் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றன.
தற்போது கூட்டு அரசு பலவீனமாகி விட்ட நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 16 உறுப்பினர்கள் விலகி விட்டுள்ள தால் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் எதிர்த் தரப்பினரால் கொண்டு வரப்படுகின்ற பல காட்சிகளே நாடாளுமன்றத்தில் அரங்கேறக் கூடியதாகவிருக்கும்.
கிராமப்புற மட்டங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருப்பதாகக் கொள்ள முடிகின்றது.
உள்ளூராட்சிச் சபை களுக்கான தேர்தலில் பெற்ற வெற்றிகள் இனி வருகின்ற காலங்களில் நடைபெறப் போகின்ற மாகாண சபைத் தேர்தலிலும் மகிந்த அணியினர் சாதகமாக வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கும், இன்றைய கூட்டு அரசின் மீதான நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்வதற்கும் மகிந்த தரப்பிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்ச சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்துவதில் வல்லவர். அரசியல் நெளிவு, சுழிவுகள் யாவும் அவருக்குக் கைவந்த கலையாகும். இனவாதம் என்ற அரசியல் ஆயுதமும், போர் வெற்றியும், தமிழினத்திற்கான எந்த விதமான உரிமைகளும் வழங்கக்கூடாது என்பதிலும், புதிய அரசமைப்புச் சீர்திருத்தச் சட்ட மூலம், தமிழினத்திற்கான சாதகமான விடயங்களைக் கொண்டிருப்பதாகக் கூறி எதிர்ப்பது போன்றவற்றை உடனுக்குடன் எதிர்ப்புப் பரப்புரையாக்குவதும் அதனை சிங்கள மக்களுக்குத் தௌிவுபடுத்தி, தொடர்ந்து மகிந்த தன்னைக் கதாநாயகனாக சித்தரித்துக் காட்டுவதிலும், நல்லாட்சி அரசைக் கவிழ்ப்பதிலும் குறியாக இருக்கும் வரையில், மைத்திரியோ ரணிலோ நிம்மதியாக ஆட்சியைத் தொடரமுடியாது.
தமிழ் மக்கள் மீதான பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைக்கக் கூடிய சாதகமான நிலையும் இல்லாமல் போகக் கூடிய நிலையே தொடரும் என்றே கருத வேண்டியுள்ளது.