ஜே.வி.பி தென்னிலங்கையிலும், வடக்கில் பிரபாகரனும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகச் சண்டை மேற்கொண்டதில் பலன் எதுவும் காணவில்லை என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் சிறியளவிலான காணியை மாத்திரமே விடுவித்துள்ளனர். விடுவித்த பகுதிகளுக்குச் சென்றுள்ள மக்கள் தங்கள் வீடுகள் இருந்த இடங்கள் தெரியாமல் அங்கலாய்க்கிறார்கள்.
தமிழ்மக்களின் பிரச்சினை தற்போது அநாதரவான நிலையிலுள்ளது. மைத்திரி – ரணில் ஆட்சிக்கு வந்து இன்று வரை தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஒரு கிராமமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
தமிழ் மக்கள் மூலம் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஆனால், இன்று வரை மைத்திரி – ரணில் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார்கள்?
தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களிடமிருந்தும் தமிழர்களுக்கு ஒரு வித நன்மையும் கிடைக்கவில்லை. ஜே.வி.பி தென்னிலங்கையிலும், வடக்கில் பிரபாகரனும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகச் சண்டை மேற்கொண்டதில் பலன் எதுவும் காணவில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்ற கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலுள்ளவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் பின்வாங்குகிறார்கள்.
ஜனாதிபதியின் கவனத்திற்கு பிரச்சினையை எடுத்துச் செல்லாவிடில் ஒருபோதும் தீர்வு காண முடியாது. கூட்டமைப்புத் தலைமை தனது தலைமைக்குக் கீழ் தமிழ் மக்களை ஒன்று திரட்ட முடியாத நிலையிலிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் பிரச்சினைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகுதி பகுதியாக மத்திய அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக எடுத்துக் கூறி வருகிறார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கான பிரச்ச்சினைகள் தொடர்பான அழுத்தங்களையும் வழங்கி வருகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.