செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பருத்தித்துறையில் மூதாட்டி அடித்துக் கொலை – ஒருவர் கைது

உயிர்த்த ஞாயிறு வழிபாட்டுக்கு சகோதரி சென்ற வேளை வீட்டில் தனித்திருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது – 69) என்ற மூதாட்டியே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குறித்த முகவரியில் வசித்து வந்துள்ள நிலையில் சகோதரி இன்று (20) ஞாயிறு காலை 7.00 மணி அளவில் உயிர்த்த ஞாயிறு தின வழிபாட்டிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். வழிபாட்டினை முடித்து காலை 9.00 மணியளவில் வீடு திரும்பிய போது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் தனித்திருந்த சகோதரி வீட்டின் சமையலறையில் தலையில் காயத்துடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

அயலவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தூக்கி வெளியே கொண்டுவந்திருந்தனர். தகவல் கிடைத்து வந்திருந்த அவசர நோயாளர் காவு வண்டியில் வந்த உத்தியோகத்தர் அவரது உடலை பரிசோதித்து ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரிவு கிராம சேவகர் ஊடாக பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டதுடன் விசாரணை மேற்கொண்டனர். குறித்த வீட்டில் முன்னர் ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் கைத்தொலை பேசி ஒன்று களவாடப்பட்டிருந்தமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட விடயம் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அடுத்து சந்தேகநபரை அடையாளம் கண்டுகொண்ட பருத்தித்துறை பொலிசார் அவரை தேடிச்சென்ற போது தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டு கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரித்த போது தெரியாதது போன்று பாசாங்கு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போது கொலை செய்த விதத்தை சந்தேக நபர் விபரித்துள்ளார். வீட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என்று கருதி சுவர் ஏறிக்குதித்து அங்கு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் நோக்கில் சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக சமையல் அறையில் இருந்த குறித்த மூதாட்டி அவரை கண்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த ரீப்பை மூலம் தலையில் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக வாக்குமூலம் வளங்கியுள்ளார்.

இதையடுத்து பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற எதிரியே! விக்னேஸ்வரன்

wpengine

இந்தியா தன்னுடைய தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?-சிவசக்தி ஆனந்தன்

wpengine

அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி…!!!

Maash