அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை பயன்படுத்தி கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள, மாவீரர் துயிலும் இல்ல நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக, செய்திகள் வௌியாகியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இதுபோன்று 40 இலட்சம் ரூபா நிதியை இதற்காக பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், குறித்த மாவீரர் துயிலும் இல்ல நிர்மாணப் பணிகளுக்கு கரச்சி பிரதேசசபை மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதேவேளை, இது பற்றி ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது பணிப்புரைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரணமாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்த, உரிய சுற்றறிக்கை உள்ளது, அது தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் பரிந்துரைகளின் கீழ் நடைபெற வேண்டும்.
அத்துடன், இந்த விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும், இதுபோன்று ஏதேனும் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருப்பின் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதாகவும், நிரோஷன் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.