வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஆளணி பற்றாக்கறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உதவி திட்டத்தின் உதவியுடன் 24 பஸ்களை எமது மாகாணத்திற்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன வழங்க வந்திருப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் உதவித் திட்டத்தில் இலங்கைக்கு கிடைத்த பஸ்களில் வடக்கு மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 24 பஸ்களை இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று.(13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்,
“எமது மாகாணத்திற்கென 8 பஸ்களை ஏற்கனவே வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதுபோல் வடக்கில் உள்ள சில சாலைகளுக்கு முகாமையாளர்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
எனினும் எமது மாகாணத்திற்கு வழங்கப்பட்ட பேருந்துகள் போதாது. மேலும் பஸ்கள் வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரிடமும் அமைச்சரிடமும் நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.
அதேபோன்று, சாரதிகள் நடத்துனர்கள் பற்றாக்குறை தொடர்பிலும் தெரியப்படுத்தி அந்த வெற்றிடங்களையும் நிரப்பி தருமாறும் கோரியிருக்கின்றேன். அதை இந்த மேடையிலும் மீண்டும் அவர்களுக்கு நான் நினைவூட்டுகின்றேன்.
அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் மட்டுமல்லாது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்.
அதனடிப்படையில் அவருக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கினள்றேன்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.