Breaking
Sun. Nov 24th, 2024

(ஊடகப்பிரிவு)

கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. தனித்துவத்துடன் பயணிக்கவேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (24) கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தனதுரையில் மேலும் கூறியதாவது;

நாட்டின் இரு தலைமைகளுக்கு மத்தியில் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை என்ற யுத்தம் நடந்து, ஏதோவொரு வகையில் முடியப்போகிறது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸை பகடையாக வைத்து ஏதோவொரு தரப்பு குளிர்காயப் பார்க்கிறதா என்பதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.

இராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்வதில் பட்டறிவுள்ளவர்கள் என்னை விட வேறு யாரும் இருக்கமுடியாது. இரு தடவைகள் ஆட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறேன். ஆனால், உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதன்மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

நாங்கள் பதவி ஆசை பிடித்தவர்களல்ல. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த பேரியக்கத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை துறந்துவிட்டு எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் தயார்நிலையில் இருக்கவேண்டும்.

சர்வதேச சமூகத்துக்கு முன்னால் இலங்கை தலைகுனிந்து நின்கின்ற நிலவரத்தை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. நல்லாட்சியை கொண்டுவந்த சக்திகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த உணர்வலைகள் எங்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

இந்நிலையில், நாங்கள் பயணிக்கவேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். தனித்துவம் என்பதில் மூலம்தான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த இயக்கத்தை பாதுகாக்க முடியும். இந்த நேரத்தில் அதிகாரம், ஆட்சி என்ற விடயம் இந்த உணர்வுகளை மீறியதாக இருக்கக்‌கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு நாங்கள் எடுத்த முடிவு இன்று முச்சந்தியில் நின்றுகொண்டிருக்கிறது. தமிழ் பேசும் மக்களிடையே இருக்கின்‌ற முரண்பாடுகளுக்கு மத்தியில் பலர் குளிர்காய நினைக்கிறார்கள். அம்பாறை மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர் எங்களுக்கு வேண்டுமென்று அநியாயம் செய்திருக்கிறார்.

கட்சியின் பொதுநலன் கருதி நாங்கள் அதை மிகவும் பொறுமையுடன் கையாண்டு வந்திருக்கிறோம். சிலர் தறுதலைத்தலமான நடந்துகொண்டாலும், ஐ.தே.க. தலைமை இதில் நேர்மையாக நடக்கவேண்டும் என்பதில் நாங்கள் கறாராக இருந்துகொண்டிருக்கிறோம். கட்சிகளுடன் இருக்கின்ற சினேகங்களுக்காக முஸ்லிம் காங்கிரஸின் தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கின்றபோது, எந்த முடிவுக்குள் நாங்கள் தயாராக இருக்கவேண்டும். பதவிகளுக்கு அப்பால், எதிர்கட்சியில் அமரவேண்டிய சூழ்நிலை வந்தாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும். முடிவுகள் என்பது எமக்கு பாதகமாக இருந்தாலும், அதை சாதகமாக்கிக்கொள்கின்ற தைரியம் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் வரவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் 16 ஆயிரம் முஸ்லிம் வாக்குளை பெற்ற சுதந்திரக் கட்சி எல்லா சபைகளையும் எங்களது கைகளில் தருமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏனைய மாவட்டங்களில் மூக்குடைபட்டவர்கள், அம்பாறையில் தங்களை வெற்றியாளர்களாக காட்டிக்கொள்வதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்துவரும் மாகாணசபை தேர்தல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தங்களது பலவீனத்தை சரிசெய்துகொள்வதற்காக சுதந்திரக் கட்சியின் பல முடிச்சுகளை போட்டுவருகின்றனர். அதற்கான முஸ்தீபுகளை இப்போதே முடுக்கிவிட்டுள்ளனர். இதன் பின்னணியில் சில சத்தியப் பிரமாணங்கள் நடந்துள்ளன. அதிலும் சிலர் போய்ச் சேர்ந்துதான் இருக்கிறார்கள் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *