ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனடியாக ஆட்சி அதிகார பலத்தில் இருந்து விலகி, சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க இடமளிக்க வேண்டும் என்று உலப்பனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று அஸ்கிரிய மாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பசில் அரசியல் தந்திரங்கள் மூலம் அதிகாரத்தை பெற முயற்சிக்கக்கூடாது

அரசியல் தந்திரங்கள் மூலம் பொதுஜன பெரமுனவிடம் தொடர்ந்தும் அதிகாரத்தை வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். தொடர்ந்தும் இப்படி செய்தால், நாட்டில் இரத்த களரி ஏற்படும்.
இதனால், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்க முயற்சிக்கும் இரட்டை குடியுரிமை பெற்ற நபருக்கு(பசில் ராஜபக்ச) அரசியல் சூதாட்டத்தை நிறுத்துங்கள் எனக்கூறிக்கொள்கிறோம்.
விரட்டியடிக்கப்பட்ட சகாக்களை கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை ஆட்டுவிக்க முயற்சிக்க வேண்டாம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தற்போது மக்கள் ஆதரவு இல்லை.
ராஜபக்சவினரின் அடிமையாக இருக்கக்கூடாது
இதனால், அவர்கள் ஆட்சி அதிகார பலத்தில் இருந்து உடனடியாக விலகி, சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் பசில் ராஜபக்ச உட்பட ராஜபக்சவினரின் அடிமையாக இருக்காது நாட்டுக்காக சுதந்திரமாக செயற்படுமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அப்படியில்லை என்றால், எமக்கு அடுத்த தேர்தல் நடத்தப்படும் வரை காத்திருக்க முடியாது. நாங்கள் பொது மக்களின் பலத்தை அன்று கொழும்பில் காட்டினோம்.
இதற்கு அப்பால் சென்று எமது பலத்தை காட்ட தயங்க மாட்டோம் என்பதை குறிப்பாக பசில் ராஜபக்சவுக்கு கூறி வைக்க விரும்புகிறோம் என சுமங்கள தேரர் கூறியுள்ளார்.