Breaking
Mon. Nov 25th, 2024

(ஊடகப்பிரிவு)

பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (8) ஆம் திகதி காலை கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது.

கைத்தொழில் வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பங்களாதேஷ் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் டொஃபைல் அஹமட்டும் பங்கேற்று நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு கூட்டு ஆணைக்குழுவின் அமைச்சு மட்டத்திலான 4வது அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றிருந்தது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள், அவ்வவ் நாடுகளின் அக்கறையைப் பேணும் வகையிலே கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு முறையான தீர்வைப் பெற்றுக்கொள்வதே கூட்டு ஆணைக்குழுவின் இலக்காகும்.

வர்த்தகம், வியாபாரம் மற்றும் கைத்தொழில் துறை, விமான சேவைகள், மற்றும் தகவல் தொழிநுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவாக்குவது தொடர்பில் ஒத்துழைப்பு மாநாடு ஏற்கனவே இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 5 வருட காலங்களில் இலங்கை பங்களாதேஷுடனான ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. 2013 ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருத்தி மற்றும் நெசவு ஆடை ஏற்றுமதியில் உயர்வான குறிப்பிடத்தக்க அதிகரிப்பான 45%ஐ எட்டியுள்ளது. இருந்த போதும் இவ்விரண்டு பண்டங்களும் 2014, 2015 ஆம் ஆண்டுகளில் வீழ்ச்சியையே காட்டியுள்ளன. எனினும் பிளாஸ்டிக் பொருட்கள், கொப்பரா, சவர்க்காரப் பொருட்கள், செயற்கையான நார்ப்பொருட்கள் ஆகியவையின் ஏற்றுமதியில் படிப்படியான அதிகரிப்பை காட்டியுள்ளது.

பருத்தி 26.01%, மனித வளங்களால் உற்பத்தி செய்யப்பட்ட நார்ப்பொருட்கள் 13.01%, பிளாஸ்டிக் பொருட்கள் 12.01%, கைத்தறி நெசவுப்பொருட்கள், 10.09% ஆகியவை ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றது.

பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கான இறக்குமதி சீரற்றே காணப்படுகின்றது. மருந்துப்பொருட்கள், அரிசி (29.03%), மின்சார உபகரணங்கள் (6.03%), புடவை மற்றும் ஆபரணங்கள் (6%),  ஆகியவை 2015ஆம் ஆண்டில் பிரதான இறக்குமதிப் பொருட்களாக அமைந்திருந்தன.

இலங்கையும் பங்களாதேஷும் தென்னாசிய சுதந்திர வர்த்தக வலயம் (SAFTA), பங்கொக் உடன்பாடு, ஆசிய பசுபிக் வர்த்தக உடன்பாடு (APTA), பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடாவின் முயற்சியான்மை (BIMS – TEC) பூகோள வர்த்தக முன்னுரிமை முறைமை, பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்து சமுத்திர ஒன்றியம் ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கின்றன.unnamed-1

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் டீ. எம். கே. பி தென்னகோன் தலைமையிலான இலங்கையின் தொழிநுட்ப தூதுக்குழுவில் வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சொனாலி விஜயரத்ன உட்பட வர்த்தக திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் இந்த துறையுடன் தொடர்புபட்ட ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகளும் அங்கம் வகித்தனர்.

பங்களாதேஷ் பொருளாதார உறவுகள் பிரிவின் மேலதிக செயலாளர் அபூ மன்ஸூர் மொஹமட் பைசுல்லாஹ் தலைமையில் அந்நாட்டின் நிதி மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.unnamed

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *