மியன்மாரின் ரக்ஹைன் மாநிலத்தில் இராணுவத்தினர் நடத்தி வரும் அத்துமீறல் நடவடிக்கைகளால் கடந்த 15 நாட்களில் சுமார் மூன்று இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.
பங்களாதேஷிற்கும் மியன்மாருக்கும் இடையே உள்ள இடைவெளி 278 கிலோ மீற்றர்கள்.
இத்தூரத்தை கடக்க கடல் , தரை என இரு வழிகள் உள்ளன. கடல் வழியாக வருகின்றவர்கள் பணத்தைக் கொடுத்து சிறிய படகுகளில் தப்புகின்றனர்.
தரை வழியாக வருகின்றவர்கள் நடந்தே இத்தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. இரண்டுமே ஆபத்துகள் நிறைந்தவை என்றாலும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பிவரும் ரோஹிங்யா அகதிகளுக்கு வேறு வழியில்லை.
பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் என்ற இடம் இவர்கள் பெரும்பாலும் வந்து சேரக்கூடிய இடமாக உள்ளது.
1970 முதல் மியன்மாரிலிருந்து வெளியேறிய சுமார் 4 இலட்சம் ரோஹிங்யா அகதிகள் இதன் சுற்றுவட்டார பகுதியிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் வந்தோரின் எண்ணிக்கை 290,000. கடந்த செப்டம்பர் 7 அன்று ஐ.நா. அதிகாரிகள் அளித்த தகவலின் படி 270,000 ஆக இருந்த எண்ணிக்கை, அடுத்த ஒரே நாளில் 20,000 பேராக அதிகரித்து 290,000 ஆகியுள்ளது.
தஞ்சமடையும் ரோஹிங்யா அகதிகளில் பெரும்பாலானோர் பத்து நாட்களுக்கு மேலாக உணவின்றி வருவதாகவும் பணம் மற்றும் உணவிற்கான உதவிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) கூறியுள்ளது.
ரோஹிங்யா அகதிகளால் கடுமையான சமூக – பொருளாதார – சுற்றுப்புற நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பங்களாதேஷ் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது அதிகரித்து வரும் ரோஹிங்யா அகதிகளின் எண்ணிக்கை பங்களாதேஷிற்கு நெருக்கடியினை உருவாக்கும் என கூறப்படுகின்றது.