(அபூ செய்னப்)
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கல்குடா நேசன் செய்தித்தளத்தில் எனக்கு எழுதிய பகிரங்க மடலைப் பார்த்தேன். என்னுடைய அரசியல் வரலாற்றில் இவ்வாறான விமர்சனங்களுக்கு நேரம் ஒதுக்கி நான் பதில் அளித்தது கிடையாது. இருந்தபொழுதிலும் நயவஞ்சகத்தனமாக பொய் பிரச்சாரம் செய்யும் உங்களுக்கு எனது விசுவாசி என்ற வகையிலும், உங்களைப் போன்ற விசுவாசிகள் எமது பிரதேசத்தில் இருப்பதனாலும் எதிர்காலத்தில் நல்ல படிப்பினையாக இருக்க வேண்டுமென்று, நினைத்து பதில் தர விளைகிறேன்.
நீங்கள் மாத்திரமல்ல உங்களைப் போல ஒரு சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதுவும் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் , பல முகங்களைக் காட்டுகின்ற விசுவாசிகளாக இருக்கின்றார்கள். இதில் நீங்கள் மாத்திரம் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? நான் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்காவது ஒரு மூலையிலிருந்து கொண்டு என்னை வசை பாடிக் கொண்டிருப்பார்கள். இவைகளெல்லாம் எனது அரசியலிலே பழகிப்போன சமாச்சாரங்கள். இதன் மூலம் நான் கோபப்படுவேன் என்றோ அல்லது தன்னம்பிக்கை இழந்து விடுவேன் என்றோ ஒரு கணம்கூட நீங்கள் நினைத்துவிடாதீர்கள். உங்களுடைய எழுத்துக்கள், கருத்துக்கள் விசுவாசி என்கின்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும், ஏதோ ஒன்றினை எதிர்பார்த்து ஏற்பட்ட தாமதம் அல்லது உங்களது தகுதிக்கு அப்பாற்பட்ட ஆசைகளைக் கொண்ட கோரிக்கைகள் தொடர்பில் என்னால் முடியாமல்போன அல்லது நன்னடத்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு காலப்பகுதியில் நீங்கள் அவசரப்பட்டு உங்களை இனங்காட்டிக் கொண்டது உங்கள் அறிவீனத்தை பறைசாற்றி நிற்கிறது. நேரடியாக விடயங்களை ஆதாரத்தோடு கண்டதைப்போன்று பொய்யான விடயங்களை முனாபிக் தனமாக நிறுவ முற்படுவதென்பது விசுவாசமாகப்படாது சகோதரரே. நீங்கள் எத்தனையோ தடவைகள் என்னுடைய எல்லா விடயங்களிலும் பங்குதாரராக இருந்துள்ளீர்கள். பிரயாணத்தில் , சாப்பிடுகின்ற நேரத்தில், ஆலோசனை நேரத்தில் இவ்வாறு என்னோடு அதிகமான நேரத்தைக் கழித்துள்ளீர்கள். அவ்வாறான கால நேரங்களிலெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட விடயத்தில் கொண்ட சிரத்தையைத்தவிர, ஊர் பற்றிய ஒரு சிறிய விடயத்தையாவது உங்களால் ஆலோசனையாக சொல்ல முடியாமல் போனதென்பது கவலைக்குரிய வியடமாக உங்களுக்குப் படவில்லையா? 2002 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சகோதரர் யூ. அஹமட் அவர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் கொண்டு சேர்த்த விடயம் பற்றி நீங்கள் பேச முற்படுவதென்பது உங்களுக்கு கடந்தகால அரசியல் நிகழ்வுகளில் ஆழம் தெரியாமை பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. சகோதரர் யூ. அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முதல் பிரதியில் கையெழுத்திட்டுவிட்டு மறுபிரதியில் நாளை கையொப்பமிடுங்கள் என்று கூறி முனாபிக்தனமாக, அவரை ஏமாற்றியது பற்றி ஒரு வசனம்கூட நீங்கள் எழுத முனையாமல் மறைக்க முற்பட்டதன் மர்மத்தை எங்களுக்கு விளங்கப்படுத்துங்கள். கல்குடா முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றும், நான் தமிழர்களுக்கு மாத்திரம் வேலை செய்வதாகவும் ஒரு புரளியைக் கிளப்பி இருக்கிறீர்கள். என்னுடைய நிதி ஒதுக்கீட்டுப் பட்டியல்களின் பிரதி உங்களிடத்தில் இருக்கிறதென்று நூறு சதவிகிதம் எனக்குத் தெரியும். அதனை ஒருமுறை படித்துப் பார்க்கும்படி வினமயாக வேண்டுகிறேன். நான் பட்டிருப்புத் தொகுதியில் ஒரு இந்துத் தாயின் வயிற்றில் மகனாகப் பிறக்கவில்லையே என்று பேசியதாக கவலைப்பட்டு பதிவு செய்ததைப் பார்த்து நான் வியந்துபோனேன். இதுபற்றிய ஆதாரங்கள் ஏதும் இருக்குமானால் தயவுசெய்து மிக மிக அவசரமாக என்னிடத்திலே கொண்டு வாருங்கள் . ஏனென்றால் அவசரமாக நான் கலிமா சொல்லி மீண்டும் இஸ்லாத்துக்குள் நுழைய வேண்டும். அல்லாஹ் உங்களையும் என்னையும் பாதுகாக்க வேண்டும். இம்முறை பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாசலில் வைத்து தமிழ் சகோதரர்களின் பங்களிப்பு இல்லையென்றால் கல்குடா சமூகத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்க முடியாதென்பதனை தைரியமாக சொன்னேன். இன்றும் உங்களிடத்தில் சொல்கிறேன். நாளையும் அதனை உங்களிடத்தில் சொல்வதனை நான் அவமானமாகப் பார்க்கவில்லை. அதற்காக அந்த விடயத்தினை பிழையாக
பார்க்கின்ற உங்களை என்னால் எப்படி மெச்ச முடியும்?
முஸ்லிம் சகோதரர்கள் வீட்டுக்கு வரும்பொழுது ஏசிவிரட்டுவதாகவும் ஏதோ நீங்கள் பக்கத்திலிருந்து நேரடியாகக் கண்டதுபோல பொய் சொல்வதென்பது,உங்களது பிறவிக்குணத்தை என்னால் எப்படி மாற்ற முடியுமென்பதுதான் எனக்குள்ளே உள்ள போராட்டம். ஏனென்றால் எமது அரசியலிலே உங்களைப் போன்ற ஒரு சிலர் இப்படியும் இருக்கத்தான் செய்கின்றார்கள். என்னைச் சந்திக்க வருகிற மக்களை எப்படி நடத்த வேண்டுமென்று உங்களின் ஆலோசனைப்படி செயல்படுகின்ற அளவுக்கு நான் இல்லையென்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்களின் ஆலோசனைப்படி செயல்படுகின்ற அளவுக்கு நீங்கள் உங்களை பெரிய ஆலோசகராக நினைத்துக்கொண்டாலும், சிலவேளைகளில் தவறியும் நான் அப்படிச் செய்ய முற்பட்டாலும், மற்றவர்கள் யாருமே உங்களுக்கு அந்த இடத்தைத் தரமாட்டார்கள். என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்று நினைக்கிறேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட எல்லா தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களினதும் மகத்தான பங்களிப்பு இல்லையென்றால் நீங்கள் இவ்வாறு கொக்கரித்திருக்க மாட்டீர்கள். என்பதனை ஞாபகமூட்ட விரும்புகிறேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஒரு ஆசனத்தை இம்முறை பெறவில்லை. மாறாக எஞ்சிய மிகுதி வாக்குகளினாலேதான் ஒரு ஆசனத்தைப்பெற முடிந்தது என்ற அரசியல் அடிப்படைக் கணக்கைக்கூட புரியாமல் பேச நீங்கள் முற்படாதீர்கள். ஏனெனில் உங்களை இன்னும் முட்டாள் என்று என் காதுபட மற்றவர்கள் கூறுகின்றபொழுது கேட்க கவலையாக இருக்கின்றது. தமிழ் பிரதேசங்களுக்கு
நான் ஏன் போக வேண்டியேற்பட்டது என்பது பற்றி அதிகம் அதிகம் பேசுங்கள், பயனுள்ளதாக இருக்கும். அதைவிடுத்து பொய்யான புனைவுகளை நிறுவ முற்பட்டு உங்கள் பாமரத்தனத்தை நிரூபிக்காதீர்கள். நீங்கள் எப்பொழுதும் பிரதேசவாதம் என்னும் தலைப்பில் செயலாற்றும் ஒரு பித்னாகாரன் என்பது உங்களது பெயரைச் சொன்னால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவார்கள். உண்மையிலேயே நான் தேடிய பித்னாகாரன் நீங்கள்தான் என்று அறியவந்தபிறகு என்னை நான் சுதாகரித்துக் கொண்டேன். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நீங்களும் என்னூடாக பலருக்கு பரோபகாரம் செய்து கொடுத்திருக்கிறீர்கள். எமக்கெதிராக வேலை செய்தவர்களையும் எம்முடையவர்கள் என்று நியாயப்படுத்தி இவ்வாறு செய்து கொடுத்திருக்கிறீர்கள். இக்காலக்கட்டத்திலெல்லாம் நான் உங்களை பிழையாக அல்லது விமர்சனக் கண்ணோட்டத்தில் என்றுமே பார்த்தது கிடையாது. எமது அரசியலிலே அனைத்து விடயங்களிலும் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுகின்ற ஒரு நேர்மையான அரசியல்வாதி நான் என்பதிலே உங்களிடத்தில் மாற்றுக்கருத்து இருக்கமாட்டாது என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் எல்லாம் ஆலோசனை கூறுகிறபடி, முடியாத விடயமொன்றில் பொய் சொல்லி சமாளியுங்கள் என்று கூறும் விடயத்திலே எனக்கு என்றுமே உடன்பாடு கிடையாதென்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதை வைத்து நாங்கள் சொல்லும் ஆலோசனையை நீங்கள் கேட்பதில்லை என்று நீங்கள் செய்கின்ற பிரச்சாரங்களும் எனக்குத் தெரியாமல இல்லை. அத்தோடு முஸ்லிம் அரசியலிலே பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் ஊரிலுள்ள முக்கிய பிரமுகர்கள் பரஸ்பரம் கட்சி மாறிக்கொள்வதும், திரும்பி வருவதென்பதும் சர்வசாதரணமான விடயம். இந்த விடயம் எல்லா அரசியல் தலைவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினை என்பதனை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படியான நிகழ்வுகளை எங்ளைப் போன்ற அரசியல்வாதிகள் எந்தக் கட்டத்திலும் அலட்டிக்கொள்வது கிடையாது. எனது அரசியல் பிரவேசம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அது ஒரு தொலைநோக்கைக் கொண்டது. கல்வி விடயத்திலும், காணி விடயத்திலும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதற்காகவே இந்த அரசியலுக்குள் காலடி வைத்தவன். அவ்வாறே கல்வி விடயத்திலும், காணி விடயத்திலும் அதிக பங்களிப்புக்களை செய்திருக்கின்றேன் என்பதிலே நீங்கள் மாற்றுக் கருத்தினைக் கொண்டிருக்கமாட்டீர்கள். நாங்கள் ஆரம்பித்த கல்வி வலயம் தேசியத்திலே நான்கு தடவைகள் முதல் இடத்திற்கு வந்து தடம்பதித்து இப்போது நிலை தடுமாறி ஏழாம் இடத்திற்கு வந்துள்ளது. இது பற்றிய உங்கள் விமர்சனம் என்ன சகோதரா? கோ.ப.மத்தி பிரதேச சபை பற்றிய பதிவுகளையும் இட்டுள்ளீர்கள். இதற்காக நான் எடுத்த முயற்சிகளில் தொடர்ச்சியாக என்னோடு ஒரு பங்குதாரராக நீங்களும் இருந்துள்ளீர்கள் என்பதனை அவசர அவசரமாக மறந்து போய்விட்டீர்கள். வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் பதினேழுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் கொழும்பிலே பத்திற்கும் மேற்பட்ட சந்திப்புக்கள் , நீர்கொழும்பு ,மாரவில ஹோட்டலில் இரண்டு நாள் செயலமர்வு என நான் அதிகாரத்தில் இல்லாமல் இருந்தபோதிலும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகத் தெரிந்து கொண்டும் ஏன் இப்படி ஹராமாக நடந்துகொள்ள முற்படுகிறீர்கள்?
2007 ஆம் வருடம் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ்ஸோடு சேர்த்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விடயத்தை நான் பகிரங்கமாக விரும்பியிருந்தபோதிலும்,நீங்கள் எல்லோரும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் ஈற்றில் சாத்தியப்படாமல் போன விடயத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது நீங்கள் பேச மறுப்பது எங்ஙனம் நியாயம்? பிறைந்துரைச்சேனையிலே நடந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் கோ.ப.மத்தி பிரதேச சபையை அமீர் அலி பெற்றுத்தருவதாக இருந்தால்,அது எமக்கு தேவையில்லை என ரவூப் ஹக்கீமுக்கு முன்னால் சூளுரைத்த அந்த சகோதரர் தற்சமயம் நம்மோடு இருந்தாலும்கூட அதை நியாயப்படுத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. இந்த விடயத்தினை ஒளிப்பதிவு செய்து என்னிடம் காட்டிய நபர் நீங்கள் என்ற அடிப்படையில் அந்த விடயத்தினையும் நீங்கள் இந்த இடத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். வாழைச்சேனையிலிருந்து எத்தனை வேட்பாளர்கள் நம்மோடு சேர்ந்து கேட்டார்கள் அல்லது நான் யாருக்கு இடம் கொடுத்தேன் என்பது பற்றி எல்லாம் பதிவு செய்திருந்தீர்கள். சகோதரர் ஜவாஹிர் சாலி என்ன தொம்பேயில் பிறந்தவராகவா நீங்கள் பார்க்கிறீர்கள். ஏன் உங்களுக்கு இவ்வளவு சின்னத்தனமானப் புத்தி என்பதனை நீங்களே உங்களுக்குள் சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். நீங்கள் பெயர் குறிப்பிட்ட நம்மோடு இருப்பவர்கள் பற்றி வெறுப்பான கருத்துக்களை , பதிவு செய்திருக்கிறீர்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும் அது நீங்கள் வகிக்கின்ற பதவியிலிருந்து விடுவிப்பு செய்ய முயற்சித்தே, இவ்வாறு பலர் மீது சேறு பூசவும் முனைந்திருக்கிறீர்கள். எமக்குள்ளே இருக்கிற அரசியல் பிரச்சினைகளை நமக்குள்ளே விவாதிக்கப் பழகிக்கொள்ளும் இங்கிதம் வேண்டும் சகோதரா? அது உங்களிடம், கொஞ்சமும் இல்லை என கவலைப்படுகிறேன். உங்களை எனது பிரத்தியேகச் செயலாளராக நியமனம் செய்ய நான் விளைகிறேன். அனைத்து விடயங்களிலும் திறமை கொண்டவராக உங்களால் செயலாற்ற முடியுமென்றால். அவசர அவசரமாக கொழும்புக்கு வாருங்கள் அந்தப் பதவியினை உங்களுக்குத் தருவதிலே எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அதற்கான வேகமும் விவேகமும் உங்களிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.அதற்கு நீங்கள் தயாரா? அன்புச் சகோதரா! நீங்கள் வேலை செய்கிற நிறுவனத்திலே உங்களது தலைமை அதிகாரியிடம், எனது பெயரை விற்று நீங்கள் அசிங்கப்பட்டதோடு என்னையும் அவமானப்படுத்தி,கூனி என்னோடிருந்து உழைப்பவர்கள் பற்றி பதிவு செய்திருந்தீர்கள். நான் ஏதோ ஒரு கெபினட் அமைச்சரைப் போலவும் எனக்குக் கீழே பல நிறுவனங்கள் இருப்பது போன்றும் அதிலே பலர் இலாபமீட்டிக் கொள்கிறார்கள் போன்ற ஒரு புரளியைக் கிளப்பி சந்தோசப்படப் பார்த்திருக்கிறீர்கள். நான் ஒரு பிரதியமைச்சர் மாத்திரம்தான். இறைவன் தந்த பதவியை முடிந்தவரை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறேன். இதன் மூலம் மற்றவர்களுக்கு என்ன கிடைத்ததோ உங்களுக்கும் அதனை கிடைக்கச் செய்திருக்கிறேன். கிடைத்தது சற்று குறைவுதான். அதற்காக சங்கடப்பட்டு, அவசரப்பட்டு விட்டீர்களே சகோதரா இம்முறை பொதுத் தேர்தலுக்கு முன்பாக, வாழைச்சேனை மைதானத்திலே நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டிலே தலைவர் ஹக்கீம் அவர்கள் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையினையும், கல்குடா தொகுதிக்கு தண்ணீரினை அவசரமாகப் பெற்றுத்தருவேன் என்றும் வாக்களித்த ஒளிப்பதிவினை நீங்கள் போட்டுக் காட்டி, இந்த இரண்டு விடயத்தினையும் அவரிடமே ஒப்படையுங்கள் என்று சொன்னவர் நீங்கள் அல்லவா? தண்ணீருக்குரிய அமைச்சர்தான் இப்பொழுது கல்குடா தொகுதிக்கு தண்ணீர் காட்டிய அழகைக் கண்டு நீங்களும்,முன்னணி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் அமைதியோடு ஏன் இருக்கிறீர்கள் என்ற பதிவை கேள்வியாக உங்களிடமே விடுகிறேன் . கோ.ப.மத்தி பிரதேச சபை விடயத்திலே அவர்களால் செய்ய முடியாது என்று அவர்கள் பகிரங்கமாக ஒத்துக்கொள்வார்கள் எனின் அப்பணியினை என் தோள்களில் சுமந்து கொள்ளவும், அல்லது அது தொடர்பில் அவர்களுக்கு என்னுடைய பூரணமான
ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருக்கின்றேன். என்ற செய்தியினை அமைதியாக இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.
திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், மரணவீட்டில் பிணமாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிற நீங்கள் எப்பொழுதுமே எதிர்மறையான கருத்தோடும், சிந்தனையுணர்வோடும் இருக்கின்ற விடயம் உங்களது பெயரை நான் குறிப்பிட்டு கூறுவேனென்றால் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள அநேகம்பேர்கள் அதனை ஆமோதிப்பார்கள் என்பது என்னுடைய அனுமானம். அன்பு சோதரா! உங்களது கடிதத்தை வாசித்த பின்னர் உங்களை இனம்கண்ட பின்னர் நீண்டகாலமாக எம்மோடு இருந்துகொண்டு எமக்கெதிராக பொய் பிரச்சாரங்களையும், கட்டுக்கதைகளையும் பரப்பியவர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. சமூகத்தில் நீங்கள் ஒரு மேதாவி என்று காட்டவேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் உங்களை நான் மிகநீண்டநாட்களாக தேடியவன். இவ்வளவு அவசரமாக அகப்பட்டுக்கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஆட்சி அதிகாரம் விடயத்திலே நீங்களும் நானும் எவ்வளவு தூரம் துள்ளித் திரிந்தாலும் இறைவனுடைய நாட்டமில்லாமல் எதுவும் நடக்காது என்பதனை நான் பரிபூரணமாக நம்புகின்றவன். சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது விடயத்திலே இதனை நாம் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. இதனை நீங்கள் உதாரணமாக வைத்துக்கொண்டு எதிர்வரும் காலங்களில் எமது பிரதேசத்தின் அரசியல், கல்வி, காணி, குடிநீர் விடயங்களிலே மிக நேர்மையான முறையிலே அதிகமதிகம் எமது பிரதேச மக்களை தெளிவுப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தத் திறமை உங்களிடத்தில் அதிகம் இருக்கிறது என்ற நம்பிக்கை என்னிடத்தில் இருக்கிறது. எதிர்காலத்திலே உங்களுடைய நேர்மையான ஆலோசனைகளை இதயசுத்தியோடு என்னிடத்திலே முன்வையுங்கள் . இவ்வாறு மறைந்திருந்து கல்லெறியாமல் நேரடியாக பேசுங்கள் அது எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போதைய அரசியல் நிலவரம் ஒரு உறையில் இரு வாள்களை வைத்துக்கொண்டிருக்கும் அரசில், நானும் ஒரு பிரதியமைச்சராக இருக்கிறேன் என்பதை மாத்திரம் அடிக்கடி நினைவுகூர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் மரணிக்கப் பிறந்தவர்கள். எங்களுடைய எல்லா செயற்பாடுகளுக்கும் கேள்விக் கணக்கு இருக்கிறது என்பதனையும். கப்ரினுடைய வேதனை பற்றியும் தெரிந்து வைத்திருக்கின்றோம். இவற்றுக்கெல்லாம் பயந்து நீங்களும் நானும் செயல்பட்டுக்கொள்வோம். எல்லாம் வல்ல இறைவன் நம்மைப் பொருந்திக்கொள்வானாக. |