பிரதான செய்திகள்

நௌபர் மௌலவியை அரசாங்கம் விரல் காட்டியுள்ளது!நம்ப முடியவில்லை?

பா.நிரோஸ்
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியென நௌபர் மௌலவியை அரசாங்கம் விரல் காட்டியுள்ள போதிலும், அதனை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, நௌபர் மௌலவியை அரசாங்கம் சூத்திரதாரியாக உருவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் நாட்டின் புலனாய்வுப் பிரிவினருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் இதனாலேயே, தாக்குதல் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள், அந்தத் தாக்குதல்களோடு தொடர்புடையப் பலர் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான 4ஆவது நாள்  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் ஆனால், தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சூத்திரதாரியின் பெயரை அரசாங்கம் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“நௌபர் மௌலவியைச் சூத்திரதாரி என்கிறது அரசாங்கம். ஆனால், அவரிடம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எந்தவிதமான சாட்சியங்களையும் பெறவில்லை. எனவே, தாக்குதலின் சூத்திரதாரியாக நௌபர் மௌலவியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

“தாக்குதல் நடைபெற்று ஒரு வருடத்துக்குப் பின்னரே நௌபர் மௌலவி கைது செய்யப்பட்டார். ஆனால், ஒன்றரை வருடங்களாக நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் அவரிடம் எந்தவிதமான சாட்சியங்களோ அல்லது விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை, இவ்வாறான நிலையில், அவர் எவ்வாறு தாக்குதலின் சூத்திராதிரியாக இருக்க முடியுமென்கிற சந்தேகம் எழுந்துள்ளது” எனவும் தெரிவித்தார்.

சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்குச் சென்றிருப்பதாகத் தெளிவான சாட்சியங்கள் உள்ளன. அதேபோல, சாரா இந்தியாவில் இருப்பதாகவும் சாட்சியங்கள் உள்ளன. ஆனால், அது தொடர்பில் இந்தியாவிடம் எந்தவிதமானத் தகவல்களும் கோரப்படவில்லை.

“பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும், போதிய சாட்சியங்களை ஆணைக்குழுவுக்கு வழங்கவில்லை. மேலும், சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பில் எந்தவிதமான சாட்சியங்களையும் பெறவும் இல்லை”  எனவும், லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி  குற்றஞ்சுமத்தினார்.

Related posts

பெண்கள் மிகவும் ராஜபக்சக்களை நேசிக்கின்றார்கள்”

wpengine

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

wpengine

இன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்

wpengine