பிரதான செய்திகள்

நோன்பு குறித்த சுற்றறிக்கைக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன?

நோன்பு தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பா,க 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் நேற்று (19)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த சுற்றறிக்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பள்ளிவாயல்களுக்கு செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதுக் கட்டுப்பாடு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.

பஸ்வண்டிகளில், புகையிரதத்தில் பயணிப்போருக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை. ஏனைய சமயத்தலங்களுக்கு செல்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி கற்போர் மிகப்பெரும்பாலோர் 18 வயதுக்கு குறைந்தவர்கள். 

நிலைமை இவ்வாறிருக்க பள்ளிவாயல்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் செல்ல முடியும் என்ற வரையறை எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட சமய ரீதியான அடிப்படை உரிமையை மீறுகின்றது.

பள்ளிவாயல்களினால் தான் கொரோனா பரவுகின்றது என்ற  ஒரு மாயையை ஏற்படுத்த இதன் மூலம் முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இது முஸ்லிம் சமுகம் பற்றிய மோசமான ஒரு மனப்பதிவை ஏனையோருக்கு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும். 

இது குறித்து 20 வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். 

ஒருங்கிணைப்புத் தலைவர் பதவி, ஒருசில வேலைவாய்ப்புகள், வேறு சில தனிப்பட்ட நன்மைகள் என்பவற்றுக்காக தொடர்ந்து முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்கப்போகின்றீர்களா அல்லது முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கப் போகின்றீர்களா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, 20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் தற்போது அரசாங்கத்தின் பக்கம் உள்ளதால் இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச வேண்டும். முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பான விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Related posts

கதிர்காமம் ஏழுமலையில் கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து!

Editor

அமெரிக்காவில் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளமையே எரிபொருளின் விலை உயர்வுக்கு காரணம்!

Editor

ஹரினுக்கு CID அழைப்பாணை!

Editor