Breaking
Sun. Nov 24th, 2024

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் ஆகியவர்களின் விபரங்கள் தொடர்பான அறிக்கையொன்றை அவரமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் அரிசியை இறக்குமதி செய்பவர்களின் விபரங்கள், அவர்கள் இறக்குமதி செய்யும் அரிசியின் கொள்ளளவு மற்றும் இறக்குமதி செய்யும் அரிசியை விநியோகிக்கும் பிரமாணம் தொடர்பிலான இன்னுமொரு அறிக்கையொன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் ரிஷாட் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார். அதே போன்று உள்ளூர் ஆலையுரிமையாளர்களிடம் இருக்கும் நெல்லின் கொள்ளளவு, அரிசிக் கொள்ளளவு மற்றும் அரிசியை விநியோகிக்கும் நடைமுறை தொடர்பிலான மேலும் ஒரு அறிக்கையொன்றையும் கோருமாறு அவர் பணித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அரிசி இறக்குமதியாளர்களின் விபரங்களும் அரிசியைப் பங்கீடு செய்யும் நடைமுறையும் கோரப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.

இவ்வருடம் மார்ச் வரை அரிசியின் விலையை கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிகரித்து விற்ற 2000 வியாபார நிலையங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து ஏமாற்றி வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்களுக்கெதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சட்ட விரோதமாக வியாபாரம் செய்பவர்களை கண்டுபிடிக்கும் தேடுதல் பணியை தீவிரமாக்குமாறு வாழ்க்கைச் செலவு உபகுழுவின் தீர்மானம் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பு ஆகியவற்றுக்கிணங்க நுகர்வோர் பாதுகாப்பு சபை தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

2017 மே மாதத்தில் அரிசி விலையை அதிகரித்து விற்ற 500 கடைகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. அரிசியின் நிர்ணய விலையை மீறி விற்பவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் மூலம் சந்தையில் அரிசியின் நியாயமான விலையை பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

தனி வியாபாரி ஒருவர் அரிசியின் விலையை அதிகரித்து விற்றால் அவருக்கு 1000 தொடக்கம் 10000 ரூபா வரை அல்லது 6 மாதம் வரை தண்டனை வழங்கக்கூடியவாறான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் 2003 இல. 09 விதிமுறைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அதிகாரசபைத் தலைவர் நிறுவனமொன்று சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டால் ரூபா 10000 தொடக்கம் 100000 வரையான தண்டப்பணம் விதிக்கப்படுவதற்கான சட்ட விதிகள் இருப்பதையும் தெரிவித்தார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *