இலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இது வரை நிர்ணயிக்கப்படாமையினால், அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து உலர்ந்த நிலையில் நெல்லை
கொள்வனவு செய்வதினால் தொடர்ச்சியாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் பாரிய நஸ்டத்தை எதிர் நோக்குவதாக மன்னார் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் நெல் நிரம்பல் சந்தையில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்தின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டாலும். மாவட்ட விவசாயிகளின் நெல் உற்பத்திக்கான விலை நிர்ணயத்தை அரசாங்கம் இது வரை உறுதிப்படுத்தவில்லை.
தனியாருக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் பல்வேறு காலநிலை பிரச்சினைகள், கால் நடை பிரச்சினைகள் ,நீர் தட்டுப்பாடுகளை கடந்து முழுமைப்படுத்தப்படும் நெற் செய்கையை திருப்தியான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்ற நெல் காய்ந்த நிலையிலே கொள்வனவு செய்யப்படுவதனால் நெல்லை காய வைப்பதற்கு ஒழுங்கான இடம் மன்னாரில் இல்லாததினால் வீதி ஓரங்களில் நெல்லை காயவைப்பதாகவும் அவ்வாறு காய வைப்பதனால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் இருக்கும் சுமைகளுடன் மேலதிக சுமைகளும் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பல வருடங்கள் நிர்ணய விலைக்கான கோரிக்கைகள் தங்களால் முன் வைக்கப்படுகின்ற போதிலும் நெல்லை காய வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கோரப்படுகின்ற போதும் இது வரை அவற்றுக்கான நடை முறை சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இவ்வாறான நிலை தொடர அரசாங்கம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் நெல்லுக்கான நிர்ணய விலையை விவசாயிகளுடன் அரச அதிகாரிகள் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும் எனவும், அதே நேரம் வலய ரீதியாக நெல்லை காய வைப்பதற்கான இடங்களையும் களஞ்சியப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களும் அதிகாரிகளும் மேற்கொண்டு தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.