Breaking
Mon. Nov 25th, 2024
(ஆக்கில்) 
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு;
‘சாத்தான் வேதம் ஓதுதல்’ என்பதற்கு, மிக அண்மைக் கால உதாரணம்; நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில் நீங்கள் கவலைப்பட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எழுதியிருக்கும் கடிதம்தான்.

நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில், அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடாகும் என, நீங்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

‘அரசியல் அரங்கில் நானும் இருக்கிறேன்’ என்பதை வெளிப்படுத்தும் வகையில், நீங்கள் காட்டியிருக்கும் வெற்றுச் சலசலப்பாக மட்டுமே, அமைச்சர் றிசாத்துக்கு நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தைப் பார்க்க முடிகிறது.

நுரைச்சோலை வீட்டுத் திட்டம் இன்றளவில் காடுடடைந்து கிடப்பதற்கு முதல் முழுக் காரணமும் நீங்கள்தான் என்கிற பூசணிக்காயை, தலை கீழாக நின்றாலும் மறைக்க முடியாது.

நுரைச்சோலை வீட்டுத் திட்ட ஆரம்ப நிகழ்வுக்கு, அப்போதைய அமைச்சர் பேரியல் அஷ்ரப் உங்களை அழைக்கவில்லை என்கிற கோபத்திலும், நுரைச்சோலை வீடமைப்பு திட்டத்தின் மூலம், அரசியல் ரீதியாக பேரியல் அஷ்ரப் பலனடைந்து விடுவாரோ என்கிற பயத்திலும், நீங்கள் ஆடிய நாடகத்தினால்தான், 500 வீடுகள் இன்றுவரை யாருக்கும் கிடைக்காமல் போயுள்ளது என்பதை மறந்து விட முடியும் என்கிறீர்களா?

அப்போதைய உங்கள் அரசியல் தளபதியும், தற்போதைய கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினருமான தவம் என்பவரை வைத்து நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வினைக் குழப்பியடித்த கதையை, நம்மூர் குழந்தை கூட சொல்லுமே.

தீகவாபி என்கிற சிங்கள ஊருக்குள், நுரைச்சோலை என்கிற முஸ்லிம் கிராமம் வந்து விடப் போகிறது என்று, தீகவாபியில் வசிக்கும் சிங்கள மக்கள் பயமுறுத்தப்பட்டார்கள்.

 அதற்காக, அப்போது அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகித்த குமார என்பவரை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்பதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை.

நுரைச்சோலை வீட்டுத் திட்ட ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற தருணம், அங்கு குமார தலைமையில் சென்ற சிங்க இனவாதிகள், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கு நிதியுதவியளித்த சஊதி அரேபியாவின் தேசியக் கொடியினை தீயிட்டு எரித்தமைக்குப் பின்னால் நீங்கள்தான் இருந்தீர்கள் என்பது மிகப் பழைய உண்மையாகும்.

ஆனாலும், இவற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் எனும் அற்ப நம்பிக்கையில், இப்போது நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில், ‘புனிதர்’ வேடமொன்றினைப் போடுவதற்கு நீங்கள் முயற்சிப்பதைப் பார்க்கும் போது, சிரிக்க மட்டுமே தோன்றுகிறது.

முசலியில் தனது மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டமைக்கு எதிராக, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஓர் அரசாங்கத்தையே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

தனது பதவிகளையெல்லாம் பலி கொடுத்தாயினும் தன்னுடைய மக்களின் நிலத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று, அவர் களமிறங்கியுள்ளார்.

ஆனால், உங்கள் பதவிகளையும் பகட்டுக்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்லவா, நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கு நீங்கள் ஆப்படித்தீர்கள்.

அந்த வகையில், அமைச்சர் றிசாத் எங்கே? நீங்கள் எங்கே??
பதவி என்பது உங்களுக்கு கிறீடம். அமைச்சர் றிசாத்துக்கு பாதணி.
அதனால்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நீங்கள் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர் றிசாட் – கழற்றி எறிந்து விட்டு, வெளியே வந்தார்.

இப்போது கூட, நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை அமைச்சர் றிசாத், நமது மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து விடுவாரோ என்கிற அச்சத்தில்தான் இப்படியெல்லாம் நீங்கள் உளறிக் கொட்டுகிறீர்கள் என்பதை, புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, யாரும் இங்கு அரசியல் குழந்தைகள் இல்லை.

நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக, அக்கரைப்பற்று முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்த வட்டமடு காணிகளை, காப்பாற்றிக் கொடுப்பதற்கு வக்கற்றிருந்த உங்கள் அரசியல் அதிகாரம் பற்றி விவாதிக்க நீங்கள் தயாரா என்பதை சொல்லுங்கள்.?

முன்னாள் அமைச்சரே, எப்போதும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிப் பழகியதால்தான், விசாலமான விடயங்களைக் கூட, குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறீர்கள்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் போல, ஆகாயம் முழுவதும் சிறகை விரித்துப் பறக்கப் பழகுங்கள்; குண்டுச் சட்டிகள் கூட விசாலமாகத் தெரியும்.

நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் உங்களுக்குள்ள ஒரேயொரு குற்றப் பரிகாரம் என்ன தெரியுமா?

 அது விடயத்தில் நீங்கள் பேசாமல் இருப்பது மட்டும்தான்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *