Breaking
Mon. Nov 25th, 2024

 (சுஐப் எம் காசிம்)
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு கையளிக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் தொடர்பில் அடுத்த அமைச்சரவையில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

நேற்று (04) அமைச்சரவை கூடிய போது இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் சுற்றுச்சூழல் அறிக்கையின் காலதாமதம் காரணமாக அடுத்த அமைச்சரவையில் இதற்கான இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

I. 2016.08.02 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிர்ணயிக்கப்பட்டதொரு காலப்பகுதிக்குள் அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலாளரின் ஊடாக நடைமுறைப்படுத்தல்,

II. மேற்குறித்த வீடுகளை புனரமைப்புச் செய்வதற்கான வேலைகளை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியை தேசிய வீடமைப்பு அதிகார சபையிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் வீடுகளை மக்களிடம் ஒப்படைக்க ஆவன செய்தல்

III. வீடுகளை புனரமைக்கத்தேவையான செலவுகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக மேற்கொண்டு வீடுகளை மக்களிடம் ஒப்படைத்த பின்னர் அதற்கு செலவு செய்யப்பட்ட நிதியை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தினூடாக ஏற்கனவே இவ்வீட்டுத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.

இதே வேளை 2016.08.02 ஜனாதிபதி தலைமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 500 வீடுகளையும் விநியோகிப்பதெனவும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 303 பயனாளிகளுக்கு அவற்றை ஒதுக்குவதுடன் எஞ்சிய 197 வீடுகளை சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களை உள்ளடக்கிய வகையில் பயனாளிகைத் தெரிவு செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென சவூதி அரேபிய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இந்த வீடுகள் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இற்றை வரை இந்த வீடுகள் கையளிக்கப்படாது இழுபறி நிலையில் இருந்ததாலேயே அமைச்சரவைக்கு இந்தப்பத்திரத்தை அமைச்சர் ரிஷாட் சமர்ப்பித்திருந்தார்.
சவூதி அமைப்பினால் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த வீடுகள் 2011 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்த போதும் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டன.

ரஜமஹா அண்மித்த பகுதிகளில் பெருந்தொகையான முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதன் மூலம் இந்த விகாரையை அண்டி வசித்து வரும் சிங்கள பௌத்த குடும்பங்களின் பரம்பலுக்கு இது தடையாக அமைவதுடன் அவர்களது அடிப்படை உரிமையை மீறுவதாக அமையுமென வலியுறுத்தி வண, எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் ஏனைய 12 பேரினால் அடிப்படை உரிமை மனுவொன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் விளைவாக குறித்த வீடுகளை ஒதுக்கீடு செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அவர்களது அடிப்படை உரிமை மனுவை கருத்திற்கொண்டு அரச நிலத்தை அரசாங்கம் மக்கள் நம்பிக்கைக்கு பொறுப்பாக வைத்திருப்பதுடன் அதனை சட்டத்தின் பிரகாரம் பாராதீனப்படுத்தலாம் என 2009.06.01 தீர்மானித்திருந்தது. இந்த தீர்ப்பினைப் பின்பற்றும் வகையில் அம்பாறை மாவட்ட செயலாளர் 2009.02.18 அன்று சட்டமா அதிபர் அவர்களிடம் சட்ட ஆலோசன கோரியிருந்தார். சட்டமா அதிபர் தனது 2012.12.31 ஆம் திகதிய பதில் கடிதத்தில் “அரச நிலத்தை அரசாங்கம் பாராதீனப்படுத்தலாம்” என பதிலளித்துள்ளார்.

 

இதன் பிரகாரம் அரசியல் அமைப்பு யாப்பு காணி கட்டளைச்சட்டம் மற்றும் காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டம் ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்கும் வகையிலே மாத்திரமே நிலம் பாராதீனப்படுத்த முடியும் எனக்குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் வசிக்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களினதும் மற்றும் இந்த மாவட்டதிலுள்ள அரச நிறுவனத்தலைவர்களினதும் பங்குபற்றலுடன் 2016.01.11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்குறித்த வீடமைப்புத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அந்த வசிக்கின்ற மூவின மக்கள் மத்தியிலும் விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் பல வருடங்களாக இந்த வீடுகள் கையளிக்கப்படாது மூடப்பட்டுக் கிடந்ததால் இந்த வீடுகள் உருக்குலைந்து காணப்படுகின்றன. அமைச்சர் சவூதி அரேபியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்த சவூதி அரேபிய “வராத்” நிறுவனத்துடன் பேச்சு நடாத்தியதை அடுத்து, குறித்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தால் புனரமைத்து நவீன வீடுகளாக மாற்றித் தருவதாக உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கம் 2017/08 என்ற இது தொடர்பான பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *