பிரதான செய்திகள்

நீலப்படையணி மீது பழிபோடும் கையாலாகாத மங்கள- முபாறக் அப்துல் மஜீத்

கண்டி பள்ளிவாயல் பலகையை உடைத்தவர்களை கைது செய்ய முடியாமல் நீலப்படையணி மீது பழி போட்டு வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தப்பிக்க முயல்வது கையாலாகாதனமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

அண்மையில் கண்டியில் சிங்கள தீவிரவாதிகளின் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. சில மாதங்களுக்கு முன் மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலிருந்து அரசுக்கெதிராக பாத யாத்திரை செய்ய முற்பட்ட போது யாரும் முறைப்பாடு செய்யாமலேயே பொலிசார் தாமாக முன்வந்து இன முறுகல் ஏற்படும் என கூறி நீதி மன்ற தடையை பெற்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என தெரிந்தும் மேற்படி கண்டி ஆர்ப்பாட்டத்துக்கு நல்லாட்சி அரசின் பொலிசார் அனுமதி கொடுத்ததுடன் முழு ஒத்துழைப்பும் வழங்கினர்.

அவர்களின் பாதுகாப்புடன் வந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டோரே கண்டி பள்ளிவாயல் பெயர் பலகையை உடைத்துள்ளனர். இதனை செய்தோர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையினரே என வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது சிரிப்பை தருகிறது. இது உண்மையாயின் சம்பந்தப்பட்ட நபரை ஏன் நல்லாட்சி அரசால் இது வரை கைது செய்ய முடியவில்லை என அமைச்சர் மங்களவை கேட்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவையே அண்மையில் கைது செய்ய முடிந்த இந்த அரசுக்கு ஒரு சாதாரண நீலப்படை உறுப்பினரை கைது செய்ய முடியவில்லையா? அல்லது செயலிழந்து போன நீலப்படையணி மீது பழி போட்டு முஸ்லிம்களுக்கெதிரான அக்கிரமங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறதா என்பதை வெளி நாட்டமைச்சர் தெளிவு படுத்த வேண்டும். அத்துடன் இஸ்ரவேலில் இலங்கையர் சிலர் வேலை செய்வதன் காரணமாகவே ஐ நா சபையில் பலஸ்தீனத்துக்கு இலங்கை ஆதரவளிக்கவில்லை என வெளிநாட்டமைச்சர் சொல்வது வெட்கக்கேடானதாகும். இஸ்ரவேலை விட லட்சக்கணக்கான இலங்கையர் அறபு நாடுகளில் வேலை செய்வது அமைச்சர் மங்களவுக்கு தெரியாதா அல்லது முஸ்லிம் சமூகம் அப்பட்டமாக ஏமாற்றப்படுகிறதா என கேட்கிறோம்.

நல்லாட்சி அரசு என்பது மஹிந்தவின் ஆட்சியைவிட மோசமானதாக இருக்கும் என்றும் இது சட்டியிலிருந்து நெருப்பில் முஸ்லிம் சமூகம் விழ வைப்பதாகும் என உலமா கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொது சொன்னது இன்று உண்மையாகிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் மீது பொய்யான பழிகளை போட்டு இனவாதம் பேசுவோரை அரசு கைது செய்யாமல் இவற்றின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார் என அவர் தலையில் பழி போடுவதன் மூலம் இரண்டு மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்க அரசு முயல்கிறது. ஒன்று முஸ்லிம்களுக்கு பொருள் இழப்பு, அச்சம் என நஷ்டத்தை ஏற்படுத்துவது, அடுத்தது மஹிந்த மீது பழியை போட்டு அரசியல் லாபம் தேடுவது.

இவற்றின் பின்னால் மஹிந்த இருக்கிறார் என்றால் இவற்றில் ஈடு படுவோர் மஹிந்தவின் ஆட்கள் என்றால் மிக இலகுவாக அரசால் கைது செய்ய முடியும் என்பதை சிந்திக்க முடியாத முட்டாள்களாக முஸ்லிம்கள் உள்ளனர் என அரசு நினைக்கிறதா என கேட்கிறோம்.

ஆகவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு இனங்களை இழுத்து அநியாய, பொய்யான பழி போட்டு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயல்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Related posts

நாம் எமது வாக்குகளை சரியாகப் பயன்படுத்தவில்லையெனின் வருந்த நேரிடும்! றிஷாட்

wpengine

மன்னார் கரிசல் காணி விவகாரம் ஒருவரைத் தவிர ஏனையோரின் பிணை நிராகரிப்பு

wpengine

புத்தாண்டு காலப்பகுதியில் அரிசியின் விலை 250ரூபா ஆகும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன்

wpengine