(Dr. யூசுப் கே. மரைக்கார் PhD)
தன்னலமற்ற தன்னிலை தாழாத நல்ல ஓர் ஆசான் அமானுல்லா அதிபர் 30/05/2017 அன்று இறையடி எய்தினார் என்ற செய்தி என்னை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. எதிரிகளிடமும் அன்புகாட்டும் ஒரு கனவான்; பழகுவதற்கு பண்பானவர், அன்பின் உறைவிடம், நாடி வருவோரை எல்லாம் அனுசரித்து அரவணைத்து அவர்களுடைய தேவைகளை அறிந்து முன்வந்து உதவும் ஓர் உத்தமர் அவர். ஆசிரியராக, அதிபராக, மக்கள் தொடர்பு அதிகாரியாக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினராக பணிபுரிந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் மாசற்ற ஒரு மனிதர் திலகமாக தன் வாழ்வை சகலரும் பயன்படத்தக்கதாக வாழ்ந்து காட்டிய ஓர் உதாரண புருஷர்.
மன்னாரில் நீர் வளம், நில வளம், கல்வி வளம் மிக்க தாராபுரம் கிராமத்தில் 20.02.1941 இல் புகழ்பூத்த புலவர் பரம்பரையில் அகமது நெயினார் புலவர், பாத்து முத்து தம்பதியினருக்கு 8 ஆவதும் இறுதிப் புத்திரருமாக இரண்டு சகோதரர்களுக்கும் ஐந்து சகோதரிகளுக்கும் இளையவராக வந்துதித்தார். தனது ஆரம்பக் கல்வியை தாராபுரம் அல் மினா மத்திய வித்தியாலயத்திலும் உயர்கல்வியை எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டு 1961 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியேற்று 1963 இல் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று சுமார் பத்தாண்டு காலம் வன்னி மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றினார். கொழும்பில் பல பாடசாலைகளில் கற்பித்து இறுதியாக கொழும்பு கொட்டாஞ்சேனை முஸ்லீம் வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே களனிப் பல் கலையில் கலை மாணிப்பட்டத்தையும் பெற்றுக் கொண்டது இவரது விடாமுயற்சிக்கும், கடும் உழைப்பிற்கும் ஓர் உதாரணமாகும்.
பால்ய வயதிலிருந்தே மதிப்புக்குரிய ஆசிரியருடன் மிக நெருக்கமாக பழகி வந்தவன் என்ற முறையில் மட்டுமன்றி சென்ற 19 வருடங்களாக அமைச்சர் ரிசாதின் அரசியல் நடவடிக்கைகளில் அதிபர் அமானுல்லாவுடன் ஒன்றிணைந்து பணியாற்றிய போது அன்னாரின் நற்குணங்களை; நன்கறிந்தவன் நான். நாங்கள் இருவரும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதய சுக்தியுடன் எமது கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமைச்சர் ரிசாத் என்ற ஒரே காரணத்துக்காக அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த காலம் முதல் அதிபர் அமானுல்லாவின் இறுதி நாட்கள் வரை இணைந்து பணியாற்றியுள்ளோம். சந்தித்த அவமானங்களை வெகுமானங்களாகவும், வேதனைகளைச் சாதனைகளாகவும் சவால்களை சந்தர்ப்பங்களாகவும் மாற்றிக் காட்டினோம்.
சென்ற சுமார் 15 வருடங்களாக அதிபர் அமானுல்லா மீள் குடியேற்ற அமைச்சிலும், கைத்தொழில் மற்றும் வரத்;தக அமைச்சிலும் (வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிலும்) அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரியாகக் கடமையாற்றியபோது அமைச்சுக்கு வரும் பொதுமக்களுடன் சேவை மனப்பான்மையுடனும், சிரித்த முகத்துடனும் பழகிய முறையை பலரும் வியந்து பேசுவதை நான் கேட்டுப் பெருமைப்பட்டுள்ளேன். பதவி நிலை மிடுக்கின்றி பாமரர்களையும் அரவணைத்து அவர்களின் தேவைகளை இனிதே நிறைவேற்றிக் கொடுத்தவர் இவர்.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வித்தகரான இவர் நாங்கள் பாடசாலையில் கற்கும் பொழுது எங்களை நடிக்க வைத்து பல நாடகங்களை மேடையேற்றியது இன்றும் நினைவில் உள்ளது. தாராபுரம் ஜின்னா விளையாட்டுக் கழகத்தின் தலைவராக நீண்ட காலம் கடமையாற்றி; கரப்பந்தாட்டப் போட்டிகளில் தானும் பங்கேற்று இந்த விளையாட்டுக் கழகம் பல தடைவை மன்னார் மாவட்டத்திலும், வடமாகாணத்திலும் சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கு வழி சமைத்தவர். இடம் பெயர்ந்த வடபுல முஸ்லீம்களுக்கான ஒன்றியத்தில் காலஞ்சென்ற வசீர் ஆசிரியருடனும் என்னுடனும் ஒன்றிணைந்து இடம்பெயெர்ந்த மக்களின் விடிவுக்காகப் பங்களித்தவர். சொந்தப் பணத்தை பயன்படுத்தி அமைச்சுக்கு வருவோரை ஆதரித்து அனுசரித்தவர். தான் புரியும் எந்த நற்காரியங்களுக்கும் உரிமை கொண்டாடும் ஆரவரம் இவரிடம் இருந்ததில்லை.
விளம்பரம் விரும்பி இவர் செயல் பட்டதும் கிடையாது. தாராபுரத்தில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் பாராயணம் செய்வதை பரம்பரையாகக் கொண்ட இவர்கள் குடும்பத்தில் அதிபர் அமானுல்லாவும் பல நாட்கள் பங்கேற்றுள்ளார். அமைச்சர் ரிசாதின் அரசியல் நடவடிக்கைகளின் பொருட்டு நாங்கள் இருவரும் காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயூப் அதிபருடன் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டிருக்கின்றோம். மன்னாரிலும், புத்தளத்திலும், வவுனியாவிலும், முல்லைத்தீவிலும் பல நாட்கள் பணியாற்றியிருக்கின்றோம். ஓர் ஆசிரியராக, அதிபராக, அன்புச் சகோதரராக சென்ற 20 ஆண்டுகள் அவருடன் இணைந்து செயலாற்றியதை என் வாழ்வின் பாக்கியமாகக் கருதுகின்றேன்.
நண்பர்களைச சந்திக்கும் வேளைகளிலெல்லாம் அவர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தைப் பற்றியே விசாரிப்பார். நான் ஐந்து ஆண்டுகள் அன்னாரிடம் மாணவனாக பயின்ற பொழுது ஆசிரியை ரசீதா, அதிபர் ஐயூப், ஆசிரியர்கள் அப்துல்ஹக், தாவூத் போன்றவர்களுடன் ஒன்றிணைந்து எனது கல்வித்திறனுக்கு வித்திட்டார். அவர்களின் ஆசிப்படியே பல அதிவிஷேட திறமைச் சித்திகளுடன் 1967 இல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வடமாகாணத்திலேயே முதல் தரத்தில் நான் சித்தியடைய இவர்களே மூலகாரணம். இவை தவிரவும் எனது பல்கலைக் கழக இளமாணி, முதுமாணி, கலாநிதி கற்கைநெறி வரை கற்கை நன்றே என்று என்னை அன்றாடம் ஊக்குவித்தவர். மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததுடன்; ஊர்ப்பற்றும் நிறைந்த இவர் தனது ஊர் மக்களுக்காகவும், சமூகத்துக்குப் பயன்படக் கூடிய முறையில் வாழ்வை மேற்கொண்ட பெருந்தகையாளர்.
அமைச்சர் ரிசாத் ஒருமுறை இவருக்கு கொழும்பிலே வீடொன்றை வாங்க உதவ முன்வந்த போது பவ்வியமாக ஏற்க மறுத்துவிட்டார். போதாக் குறைக்கு நானும் உதவுகிறேன் என்று முன்வந்த பொழுது எங்களது நீண்ட நாள் நட்புக் காலத்தில் அன்று மடடும் அன்புடன் என்னைக் கடிந்து கொண்ட எந்நிலையிலும் தன்னிலை தாழாத கனவான் அதிபர் அமானுல்லா அவர்கள்.
அண்மைக் காலத்தில் சுகவீனமுற்றிருந்த பொழுது பல தினங்கள் சென்று பார்த்திருக்கின்றேன். அப்போதெல்லாம் எமது ஊரவரான அமைச்சர் ரிசாதுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு ஆலோசனை கூறுவார். நான் மனம் திறந்து பேசும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். வீட்டிலும், பொது வைபவங்களிலும், காரியாலயத்திலும் அழகாக உடையுடுத்தி வரும் அவரின் சிரித்த முகத்தை இனிமேல் பார்க்க முடியாதே என்றெண்ணும்போது என் கண்கள் பனிக்கின்றன. பிறந்தவர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். மனிதன் தினமும் பிறக்கின்றான், இறக்கின்றான். இதற்கு இடைப்பட்ட வாழ்ந்த காலத்தில் எம்மைச் சார்ந்த உறவினர்களுக்கும், சமூகத்துக்கும் செய்திருக்கக் கூடிய பயனுறுதியுடைய பணிகளில்; நாம் விட்டுச் சென்ற பண்பாடுதான் சாலச் சிறந்தது.
அவரது குடும்பத்தினர் எல்லோரும் பெருமைப்படத்தக்க அந்த மரபையே எனது அன்பு நிறை ஆசான், அண்ணன், அதிபர், புலவர் அமானுல்லா டீ.யு. விட்டுச் சென்றிருக்கின்றார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது திருக்குறள். அவரது அன்பு மனைவி உம்முகுல்தூம், நான்கு குழந்தைகள், சகோதர சகோதரிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு அடுத்து அமைச்சர் ரிசாதுக்கும், எனக்கும் தனிப்பட்ட வகையில் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பாரிய ஓர் இழப்பாகும்.