2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்காக வரவுசெலுவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்டு வந்த குழுநிலை விவாதங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று மாலை இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகள் கிடைத்தன. எதிராக 56 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, 99 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
கூட்டு எதிரணி மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். நடந்த இறுதி வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.