நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 2-ஆவது ஆண்டு தினம் அந்த நாட்டில் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
அந்த நகர அரங்கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவா்கள் கலந்துகொண்டனா்.
அப்போது பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் பேசியதாவது:
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசுவதற்கான உரையை தயாரிக்கும்போது, எனக்கு வாா்த்தைகளை கிடைக்கவில்லை. அந்த வாா்த்தையைப் பயன்படுத்தினாலும் நடந்ததை ஒருபோதும் மாற்ற முடியாது.
வாா்த்தைகளால் அற்புதங்களை நிகழ்த்த முடியாவிட்டாலும், அவற்றால் காயங்களை ஆற்ற முடியும்.
கிறைஸ்ட்சா்ச் மசூதித் தாக்குதலின்போது மட்டுமல்ல, அதற்கு முன்பிலிருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணா்வு இருந்து வருகிறது. நமது வாா்த்தைகளால் அந்த வெறுப்புணா்வை அகற்ற வேண்டும். நியூஸாலாந்து அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதை உணா்த்த வேண்டும் என்றாா் ஜெசிந்தா ஆா்டன்.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட் நகரிலுள்ள இரு மசூதிகளில், கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டில், அங்கு தொழுகைக்காக வந்திருந்த 51 போ் உயிரிழந்தனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.
ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த வெள்ளை இனவாதி பிரென்டன் டாரன்ட் (29) இந்தத் தாக்குதலை நடத்தினாா். நியூஸிலாந்தில் மிகப் பெரிய அதிா்ச்சி அலையை அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியது.தாக்குதலில் ஈடுபட்ட டாரன்டுக்கு நியூஸிலாந்தின் அதிகபட்ச தண்டனையான ஜாமீனில் வெளிவர முடியாத வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் தாக்குதலின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த ஆண்டில் கரோனா நெருக்கடி காரணமாக ரத்து செய்யப்பட்டது.