Breaking
Mon. Nov 25th, 2024

(சுஐப் எம்.காசிம்)  

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவைகளே என்றும், நாட்டை அகல பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து, அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முடக்குவதே எதிர்த்தரப்பினரின் நோக்கம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் பங்கேற்று, உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது,

கடந்த அரசின் ஆடம்பரமான செலவுகள் மற்றும் வெளிநாட்டுக் கடன்களால் இந்த நாட்டிலே முரணான சூழல் ஒன்று ஏற்பட்டிருப்பதை நாம் இன்னும் கண்ணாரக் காண்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, நாட்டிலே பாரிய நம்பிக்கை ஒன்றை தோற்றுவித்திருகின்றனர். இலங்கையில் புதிய சகாப்தம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. சுதந்திரமும், நல்லாட்சியும் இப்போதுதான் மலர்ந்திருக்கின்றது.

கடந்த காலத்தை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. சர்வதேச சமூகத்தின் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டோம். எமது பொருளாதாரம் சிதைந்து போனது. உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், தனியார்த் துறையினரும் தமது வர்த்தகத்தில் படிப்படியாக நம்பிக்கையை இழந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன. இன ரீதியான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தோம். மூன்று தசாப்த காலம் எம்மை ஆட்டிப்படைத்த யுத்தம் முடிவடைந்த போதும், நாட்டிலே ஏற்பட்டிருந்த அமைதியற்ற நிலையினால் பல நன்மைகளை இழக்க நேரிட்டது.

இந்தச் சவால்களை வெற்றிகரமாக முறியடித்து ஜனாதிபதியும், பிரதமரும் எங்களின் உதவியுடன் நல்லாட்சியை உருவாக்கினர். உண்மையான பொருளாதார வளர்ச்சி, சிறந்த வாழக்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்த பாடுபட்டு வருகின்றனர். தற்போது கருத்துச் சுதந்திரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.  சர்வதேச உறவுகள் பாரியளவில் வளர்ச்சிகண்டு வருகின்றன. வெளிநாடுகளின் நன்மதிப்பைப் படிப்படியாகப் பெற முடிந்திருக்கின்றது.

நிதியமைச்சர் ரவி மீது இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்  கொண்டுவந்துள்ளனர். அவர் நாட்டின் பொருளாதாரத்தை பிழையான வழியில் கையாள்வதாகவும், நாட்டைப் பொருளாதாரச் சீரழிவுக்கு உட்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருகின்றார்.

கடந்த அரசின் ஆடம்பர நடவடிக்கைகளினால் இந்த நாட்டில் ஏற்பட்ட பிழையான பொருளாதாரக் கொள்கைகளினால் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததை இவர்கள் மறந்துவிட்டார்களா?

நல்லாட்சித் தலைவர்களுடன் இணைந்து நிதியமைச்சர் ரவி, நாட்டை மீண்டும் பொருளாதார ஸ்திர நிலைக்கு கொண்டுவரப் பாடுபடுவது நமக்குத் துலாம்பரமாகத் தெரியவருகின்றது.

கடந்த அரசு சர்வதேச நாடுகளிலிருந்து உயர் வட்டியில் கடனைப் பெற்றது. ஆனால் நிதியமைச்சரின் நடவடிக்கைகளினால், சர்வதேச நாணய நிதியம் எந்த நிபந்தனையுமின்றி நமக்குக் கடன்தர இணங்கியுள்ளது.

கடந்த அரசில் பொருளாதாரத் திட்டங்களால் எமது பணவீக்கம் 15 சதவீதமாகக் கூடியது. தனியாள் வருமானம் குறைந்து, குடும்பத்தின் பொருளாதாரச் சுமை அதிகரித்தது. இவ்வாறான ஒரு நிலையிலே, நாசமாக்கப்பட்ட ஒரு பொருளாதாரமே நல்லாட்சியின் கைகளுக்குள் வந்து வீழ்ந்தது.

ஜனாதிபதியினதும், பிரதமரினதும் வழிகாட்டலில் நிதியமைச்சர் ரவி கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்தார். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு யோசனைகளை வெளியிட்டார்.

நாட்டைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆட்படுத்தியுள்ளதாக, நிதியமைச்சர் ரவி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிட்டு, எதிர்க்கட்சியினர் அபிவிருத்திப் பாதையில் இதனை இட்டுச்செல்வதற்கு முன்வர வேண்டும்.

நிதியமைச்சர் ரவியின் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் மூலம், சீரழிந்த பொருளாதாரத்தை தட்டி நிமிர்த்த முடியும் என நாம் நம்புகின்றோம்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *