அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை ,சவளக்கடை பிரதான வீதியின் பூமரத்தடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் எம்.வி.நவாஸ் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பூமரத்தடி சந்தியில் சிவராத்திரி தினத்தில் சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியுள்ளதனை தொடர்ந்து கொட்டகை அமைத்து பிரதேச வாழ் மக்கள் வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆலயம் இந்துக்கள் செறிந்து வாழும் பிரதேசத்திலே அமையப்பெற்றுள்ளது.
இதனால் நாவிதன்வெளி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வெற்றியீட்டிய எம்.வி .நவாஸ் என்பவருக்கு ஏன் இந்த இனவாத சிந்தனை தோற்றம் பெற்றது என புரியவில்லை என பிரதேச வாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தனது சுய அரசியல் இலாபத்திற்காக பிற மதங்களை சீண்டி அரசியல் செய்வதால் ஒற்றுமையாக உள்ள இரு சமூகத்திடையே மத கலவரம் ஒன்றினை தோற்றுவிக்க வழிவகுக்கும் என அச்சம் கொள்கின்றனர்.
இந்துக்களின் மத நம்பிக்கையை அடக்கி அரசியல் செய்ய முற்படுவது அப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் இன முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் செய்ய எத்தனிப்பதாக மத நல்லிணக்கத்தை பேணும் புத்தி ஜீவிகளின் எண்ணக்கரு.
குறித்த ஆலயம் தொடர்பாக மக்களின் கருத்து பின்வருமாறு,
ஆசியாவின் இரண்டாவது அரிசி ஆலையான சவளக்கடை அரிசியாலைக்கு வரும் பௌத்த, இந்து சாரதிகள் உட்பட அனைவரும் தரித்து நின்று வணங்கிச்சென்ற இடம்.
1985 ஆம் ஆண்டு வரை நாங்கள் வழிபட்ட இந்த ஆலயத்தை இனக்கலவரத்தின் போது குறுகிய மனநிலை உள்ள சிலர் அழித்துவிட்டனர்.
அந்த ஆலயத்தை நாங்கள் இப்போது வழிபடுவதில் மாற்று சமூகத்திற்கு எந்த விதத்தில் தடையாக இருக்கின்றது. இந்துகள் வழிபாட்டு முறையையும்,கலாசாரத்தையும் அடக்கும் குறுகிய மனநிலை உள்ளவர்களே தடைபோட எத்தனிக்கின்றனர்.
ஆலயத்தினருகே காணியொன்றினை வாங்கியுள்ள முஸ்லிம் நபர் மாட்டிறைச்சி கடை ஒன்றை போடவுள்ளதனாலே இவ் ஆலயம் சட்டத்திற்கு அப்பால் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக முறைப்பாட்டினை செய்துள்ளனர்.
என்பது சவளக்கடை மக்களிடையே பரவலாகவுள்ள கருத்து.
மூவினங்களும் ஒற்றுமையாகவுள்ள இப்பிரதேசத்தில் குறித்த ஆலயம் அகற்றப்படுமேயானால் பாரிய மதக்கலவரம் வெடிக்கும் என பிரதேச வாழ் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.