தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நாளை (25) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையை (ஆசிரியர் போட்டிப் பரீட்சை) இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
நேற்றையதினம் (23) உயர் நீதிமன்ற நீதியசர்களான விஜித் மலல்கொட, எச்.எம். நவாஸ், ஜனக் டி சில்வா குழாம் முன்னிலையில் அதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களை பரிசீலனைக்காக அழைக்கப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
பட்டதாரிகள் சங்கம் இம்மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், இவ்வாறு குறித்த பரீட்சை நடாத்துவது சட்டவிரோதமானது எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் மேற்கொள்ளுமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, மனு மீதான விசாரணை முடியும் வரை, அது தொடர்பான பரீட்சையை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர குறித்த பரீட்சை நாளை நடைபெறாது என அறிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறும் உயர் நீதிமன்ற தீர்மானத்தின் பிரகாரம் இப்பரீட்சை மீண்டும் நடாத்தப்படும் திகதியினை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசலைகளில் நிலவும் சிங்கள, தமிழ், ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நாளை (25) சனிக்கிழமை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.