Breaking
Wed. Apr 24th, 2024

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை ஆதரித்து, பொத்துவிலில், இன்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“சமூக நலனுக்காகவும் அதன் இருப்பு, பாதுகாப்பு, உரிமை மற்றும் அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் ஓர் நிறுவனமாக கட்சி இருக்க வேண்டுமென்பதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதுடன், அந்த வழியிலே குறுகிய காலத்தில் பயணித்து, பல்வேறு அடைவுகளையும் பெற்றுள்ளது என்பதில் திருப்தி காண்கின்றோம்.

தற்போதைய காலகட்டம் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டிய ஒன்று. அதுவும் எதிர்கொள்ளவுள்ள தேர்தல், நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லையெனின் வருந்த நேரிடும். அத்துடன், கைசேதப்பட வேண்டியிருக்கும். இவ்வாறானதொரு பாரிய அச்சம் நமக்கு இருக்கின்றது.

இன்று ஊடகங்களிலே மிகவும் பரபரப்பாக பேசப்படும் பிரதேசமாக பொத்துவில் விளங்குகின்றது. பொத்துவில்தான் தற்போது பிரதான கருப்பொருளாகவும் இருக்கின்றது. இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது, அவர்களிடம் அரசியல்தாகம் தெரிகின்றது. பொத்துவில் நிறைய வளங்களைக் கொண்டிருக்கின்றது. அத்துடன், மக்கள் செறிவாக வாழ்ந்த போதும், ‘இந்த மண்ணிலிருந்து ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவில்லையே!’ என்ற குறை எல்லோரிடமும் தெரிகின்றது. எனவேதான், இம்முறை அந்த இலக்கை அடைவதற்காக, நமது கட்சியிலிருந்து ஆளுமையுள்ள, இந்த மண்ணில் பிறந்த ஒருவரை வேட்பாளராக்கியிருக்கின்றோம்.

“மக்கள் காங்கிரஸ் சார்பாக பொத்துவிலில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படும் போது, தேசியப்பட்டியல் தருவீர்களா?” என இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும், கட்டார் வாழ் இளைஞர்களும் என்னிடம் கேட்டிருந்தனர். அத்துடன், இங்கிருக்கும் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் விலாவாரியாக முன்வைத்து, எமக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசியம் என்றனர். இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, நமது கட்சியின் பொத்துவில் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரபுக்கு புள்ளடியிட்டால் அது மிகச்சுலபம் என நான் பதிலளித்ததுடன், அதனை சரியாகப் பயன்படுத்துங்கள் எனவும் தெரிவித்தேன். பல்துறை ஆளுமையுள்ள சட்டத்தரணி முஷர்ரப்பை நீங்கள் வெற்றிபெறச் செய்தால், அவர் உங்கள் காலடிக்கு வந்து பணிபுரிவார். கடந்தகாலங்களில் நீங்கள் விட்ட தவறுகளை இம்முறை செய்ய வேண்டாம்.

உங்கள் மண்ணின் மைந்தன் முஷர்ரப், மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறப்போகின்றார் என்ற செய்தி பரவத் தொடங்கியதும், வேறு கட்சிகளிலிருந்து புதிய வேட்பாளர்கள் இங்கு முளைவிடத் தொடங்கினர். இத்தனை வருடகாலம் பொத்துவில் மண்ணுக்கான வேட்பாளரைப் பற்றி சிந்திக்காத, எண்ணியிராத கட்சிகள் எல்லாம், மக்கள் காங்கிரஸ் எடுத்த முயற்சியின் பின்னர், புதிது புதிதாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இந்த திடீர் செயற்பாடு ஊரின் மீது கொண்ட பாசமா? சமூகத்தின்பால் கொண்ட அன்பா? ஊர்ப் பிரச்சினைகளை உண்மையாகவே தீர்க்க வேண்டுமென்ற தாகமா? என்பதை நீங்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

மக்கள் காங்கிரஸ் தலைமையை சாய்க்க வேண்டுமென்றும், கட்சியை பூண்டோடு அழிக்க வேண்டுமென்றும் பலமுனைகளில் சதிகள் இடம்பெறுவதை நீங்கள் அறிவீர்கள். எனவே, இந்த கட்சியின் இடையறாத பயணத்துக்கு இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்தியுங்கள்.

கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ், சுமார் 33,000 வாக்குகளைப் பெற்றது. இம்முறை அந்த எண்ணிக்கை இரட்டிப்படையும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேசத்திலும் தரமான, தகைமையுள்ள, திறமையான வேட்பாளர்கள் பட்டியலில் இருப்பது, இம்முறை நமது இலக்கை சுலபமாக்கும். இறைவனும் இதற்கு உதவி செய்வான்” என்று தெரிவித்தார்.

பொத்துவில் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரபின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்றூப், திகாமடுல்லை மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத், கொள்கை பரப்புச் செயலாளரும் வேட்பாளருமான ஜவாத், மாவட்டக்குழுத் தலைவர் சட்டத்தரணி அன்சில் மற்றும் மாவட்டக்குழு செயலாளர் ஜுனைதீன் மான்குட்டி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *