மீராவோடை சக்தி வித்தியாலய மைதான காணி முஸ்லிம்களுக்குரியது என நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நான் தெரிவிக்காத ஒன்றை இவர்கள் திட்டமிட்டு புனைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு – மீராவோடை சக்தி வித்தியாலய மைதான காணி முஸ்லிம்களுக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியதாக குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இது தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் வகையில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு நகரில் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை மங்களராமய விகாராதிபதியுடன் இணைந்து செயற்படும் சிலர் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்தியதை அறிந்து கொண்டேன்.
வாழைச்சேனை – மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு 125 வருடங்களாக முஸ்லிம்கள் உரிமையாளராக இருப்பதாக, நான் கூறியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மீராவோடை சக்தி வித்தியாலய மைதான காணி முஸ்லிம்களுக்குரியது என நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது. நான் தெரிவிக்காத ஒன்றை இவர்கள் திட்டமிட்டு புனைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததைப் பற்றியோ அல்லது பொம்மை எரித்ததைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. இது பொய்யானதொரு நடவடிக்கை. நான் எப்பொழுதும் எமது மக்களின் சார்பாக இருப்பவன்.
நான் கூறாத ஒன்றை கூறியதாக குற்றம் சுமத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டது தொடர்பாக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன் என தெரிவித்துள்ளார்.