நான் அரசியலுக்கு வந்த பின்னர் இரண்டு எரிபொருள் நிரிப்பு நிலையங்களை பெற்றுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் தெரிவித்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அதிகாரிகள் எழுதித்தருவதையெல்ல தேடிப்பார்க்காமல் சிறுபிள்ளைத்தனமான வெளியிடுவதை அவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததால் கடந்த சில நாட்களாக இந்த சபைக்கு வரமுடியாமல் போனது. அந்த காலப்பகுதியில் வெளிவ்வகார பிரதி அமைச்சர் அருன் ஹேமச்சந்திரா இந்த சபையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் எனக்கும் எனது குடும்பத்தனருக்கும் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருப்பதாகவும் அது அரசியல் செல்வாக்கில் பெற்றுக்கொண்டவை என்ற வகையிலே இந்த சபைக்கு அறிவித்திருந்தார்.
நான் அரசியலுக்கு வர முன்னரே மஸ்தான் ட்ரேடர்ஸ் மற்றும் எம்.எஸ் இன்டபிரைசஸ் என்ற எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எங்களுக்கு இருந்து வருகின்றன. ஆனால் இதனை நான் அரசியலுக்கு வந்த பின்னர் பெற்றுக்கொண்டதாக பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக சேறுபூசும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக்கூடாது. ஒருவர் பற்றி ஒரு தகவலை தெரிவிக்கும்போது அதன் உண்மைதன்மை தொடர்பில் தேடிப்பார்த்து தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதிகாரிகள் எழுதித்தருவதை அவ்வாறே வாசிக்கக்கூடாது.
இந்த அரசாங்கம் மீதும் ஜனாதிபதி மீதும் நான் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஊழலற்ற அரசியலை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதனால் இவ்வாறு சேறுபூசும் அரசியலை செய்யக்கூடாது. நானும் எனது குடும்பமும் வர்த்தகம் சார்ந்தவர்கள். நான் அரசியலுக்கு வந்த பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அதனால் எனது சகோதரர்கள் தற்போது அந்த வர்தத்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நான் அரசியலுக்கு வந்த பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட விடயத்தை முற்றாக மறுக்கிறேன் என்றார்.
வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg