பிரதான செய்திகள்

நானே நடவடிக்கை எடுத்தேன்! கல்முனை முன்னாள் முதல்வர் சிராஸ்

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி அலகு அதாவது நகர சபை கிடைக்க வேண்டும் என முதன் முதலில் நடவடிக்கை மேற்கொண்டவன் நான் என முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நான் கல்முனை மாநகர சபையை சரியாகவும் இப்பகுதியில் வாழும் மக்களின் மக்கள் சேவகனாக நேர்த்தியாக சேவை செய்து கொண்டு வந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம்  காங்கிரஸ் தலைமையால் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். இது நான் பிரதிநிதித்துவப்படுத்திய சாய்ந்தமருது  மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவும் தாகமாகவும் இருந்த சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி அலகை வென்றெடுப்பதற்காக நானும் எனது ஆதரவாளர்களும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வது என்றால் சாய்ந்தமருதுக்கு நகர சபை ஒன்றை பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை மாத்திரம்  முன்வைத்தோம். அதனை அவர் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு- அதனை செய்து தருவதாக வாக்குறுதியளித்து – அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கான முழு நடவடிக்கையையும்  எனது முன்னிலையில் செய்து காட்டினர். ஆவணங்களையும் தயார் படுத்தினார்.

அதற்காக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரத்துக்காக அச்சுக்கு செல்லும் சமயத்தில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை தடுத்தவர்கள் உள்ளூர் அரசியல் வாதிகள். அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உள்ளூர் அரசியல்வாதி   இதனை தடுத்ததாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

எனவே முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் சிராஸும்  எதுவும் செய்துவிட கூடாதென்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தவர்கள்தான் முகநூலில் அறிக்கை  விடுகிறார்கள். எங்களால் தான் உள்ளூராட்சி அலகு வழங்கப்படும் என தம்பட்டம் அடிகின்றனர். சாய்ந்தமருதுக்கு  உள்ளூராட்சி அலகு ஒன்று கிடைக்காமல் தடுத்தவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

நான் இது தொடர்பாக 100 நாள் வேலைத்திட்டத்தில் நகர சபையை பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியிருந்ததையும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்துகிறேன். சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளி நிர்வாக சபையினர் எனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.  இது இவ்வாறு இருக்க கடந்த பொதுத்தேர்தலில் நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியூதீனின் கட்சியில் தனது ஆதரவாளர்கள் சகிதம் முதன் முதலில் இணைந்து சாய்ந்தமாருது  மக்களின் நீண்ட கால கோரிக்கையான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை முன்வைத்து அதனைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் கட்சியில் இணைந்து கொண்டோம். தேர்தலிலும் போட்டியிட்டேன். அவரும் அதனை செய்து தருவதாக கூறி அமைச்சர் பைஸர் முஸ்தபாவை சந்தித்து சாய்ந்தமருதுக்கான நகர சபை அதிகாரத்தை வழங்குவது என்ற நியாயமான எமது மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டார் அமைச்சர் றிஷாத்.

அண்மையில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் மாமனார் காலமானார். மரணவீட்டுக்குச் சென்ற வேளை, அமைச்சர் றிஷாத் பதியூதீனுடன் நானும் சென்றேன். அவ்வேளை அமைச்சர் பைஸர் முஸ்தபா, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதற்கான வேலைகள் பூர்த்தியாகி விட்டது என்று குறிப்பிட்டார்.

இப்போது யார் யார் எல்லாம் நாங்கள் செய்து கொண்டு வருகிறோம் என அறிக்கைகள் விடுகின்றனர். சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி கிடைக்கக் கூடாது என தடுத்தவர்கள், நாங்கள் நல்லவர்கள் என காட்டி மக்கள் மத்தியில் இடம்பிடிக்க பார்க்கிறார்கள். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ், சிராஸ் மீராசாஹீப் ஊடாக சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கி விடுவார் என தொலைபேசி மூலம்  தடுத்தவர்களும் இப்போது நாங்கள் செய்தோம் என அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது என தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஞானசார தேரரைக் கைது செய்ய குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை

wpengine

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

wpengine

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்! 12வருட கால முயற்சி

wpengine