Breaking
Sun. Nov 24th, 2024

இந்த நாட்டிலே வடக்கிலே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியமைக்கு மூல காரணம் தென்னிலங்கையின் பேரினத்து அரசியல்வாதிகளே என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று மாலை அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாடாளுமன்றத்தில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தென்னிலங்கையில் மிகவும் மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டை பிரிவினைக்கு இட்டுசெல்லுமென தென்னிலங்கையில் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல், தமிழர் பிரதேசத்தில் ஒருவகையான பிரசாரம், முஸ்லிம் பிரதேசத்தில் இன்னுமொரு வகையான பிரச்சாரம், தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்டும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நகல் அறிக்கையினை ஆளுக்கொருவிதத்தில் கூறு போடப்பட்டு ஒவ்வொருசாராரும் தத்தமது அரசியல் இருப்புக்காகவும், ஆதாயத்திற்காகவும் அதனைக் கையில் எடுத்துள்ளனர்.

தமிழிலே ஒன்றிருப்பதாகவும், சிங்களத்திலே வேறொன்று இருப்பதாகவும் ஊடகங்கள் சிலவும் இந்த பிரசாரங்களை வரிந்து கட்டிக்கொண்டு முன்னெடுத்து வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு தென்னிலங்கையின் சில கட்சிகள் இதனை ஒரு கருவியாக எடுத்து, இல்லாத பொல்லாத விடயங்களை சோடித்து கதைகளை கட்டவிழ்த்துள்ளன.

எப்படியாவது இந்த தீர்வுத் திட்ட முயற்சியை இல்லாமலாக்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழ் நிலையில் வெறுமனே நூறு ஆசனங்களை கொண்ட பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு இதனை நிறைவேற்றப்போகின்றது?
இந்த நாட்டிலே இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டு நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமெனில் மூவின மக்களினது பிரதிநிதிகளும் மனம்விட்டு பேசி எல்லோருக்கும் பொருத்தமான ஒரு தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டு அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும்.

இதுவே காலத்தின் தேவையாக இருக்கின்றது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *