தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சர்வஜன அதிகார கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் வழங்கல் தொடர்பான நேர்காணலில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
அரசாங்கத்தால் மிதமிஞ்சிய பொய்யால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள்.நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பொருளாதார கொள்கை என்பதொன்று கிடையாது.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளை எவ்வித மாற்றமுமில்லாமல் அமுல்படுத்துகிறார். நாணய நிதியத்தை தஞ்சமடைந்து புகழ்பாடுகிறார்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியாமல் அரசாங்கம் தற்போது தடுமாற்றமடைந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம். அரசாங்கம் மக்களுக்கு பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியது. இதுவே எம்மை வெற்றிப்பெறச் செய்யும் என்றார்.