(பழுலுல்லாஹ் பர்ஹான்)
நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 152 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பிரதான நிகழ்வு 21-03-2016 நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்க தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கலந்து கொண்டு இலங்கை பொலிஸ் படையின் கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான சட்டத்தரணி ரத்நாயக்கா ,சிசிர,உட்பட நாட்டுக்காக உயிர் நீத்த தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ பொலிஸ் வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் வன் செயல்களினால் நாட்டுக்காக பாடுபட்டு உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ,அவர்களுக்காக பொலிஸ் மரியாதையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ,மதகுருமார்கள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாட்டுக்காக பாடுபட்டு உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
1864 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி மாவனல்லையில் குற்றவாளியொருவரைக் கைது செய்வதற்கு முற்பட்ட வேளை துவான் சபான் எனும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர் தன்னுயிரை இத் தாய் நாட்டுக்காக தியாகம் செய்தார்.
இவ்வுத்தியோகத்தர் உயிர் நீத்த தினத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸ் வீரர்கள் ஞாபகார்த்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அன்று முதல் இன்று வரை இலங்கையில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
முப்பது வருட கால பயங்கரவாத யுத்த சூழ்நிலையினால் இலங்கையில் இதுவரையில் 3110 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையின் போது உயிர் நீத்துள்ளதுடன்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 457 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிர் நீத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.