தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைவதனால் நாட்டின் பல பாகங்களிலும் தொடரச்சியான மழை பெய்வதற்கான சூழல் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதற்கான அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் மேற்கு, வடமேற்கு, தெற்கு மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் அதிகளவு மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் 75 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும். அத்தோடு கிழக்கு மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
கடற்சார்ந்த பகுதிகளிலும் நாடு பூராகவுமுள்ள சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் தெற்கு, கிழக்கு, மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறித்த காலநிலை சில நாட்கள் தொடரும் சாத்தியம் உள்ளது.
மேலும் தற்காலிகமாக நிலைகொண்டுள்ள குறித்த காற்றழுத்தம் பலத்த காற்றாக மாறுவதற்கான சூழல் காணப்படுகின்றது. இதனால் இடியுடன் கூடிய மின்னலும் சில பகுதிகளில் ஏற்படலாம். எனவே மக்கள் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.