பிரதான செய்திகள்

நாட்டின் ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது முஜுபுர் றஹ்மான்

இந்த நாட்டின் ஒற்றுமையையும், சகவாழ்வையும் விரும்பாத ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை விரும்பாத இவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் காரணத்திற்காக பாராளுமன்றத்திற்கு குண்டு வைக்க வேண்டுமென்று சொல்கின்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள் என பாராளுமன்றத்தில்  அரசியல் அமைப்பு சபை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது  முஜீபுர் றஹ்மான் கருத்து தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தெற்கிலும், வடக்கிலும் உருவாகியுள்ள இனவாத செயற்பாடுகள் தொடர்பாக விபரித்த அவர், புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி சரித்திர் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது உரையில்,

இன்று இடம்பெறும் புதிய அரசியலமைப்பு  தொடர்பான வரைபும் அது தொடர்பான விவாதமும் இலங்கை வரலாற்றிலே அதிசயிக்கத் தக்க ஒரு திருப்பு முனையாகும் என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளாலும் அந்த அரசியல் கட்சிகளை வழி நடாத்துகின்ற அரசியல் தலைவர்களாலும் முன்வைக்க முடியாத ஒரு விடயத்தை, இன்று  அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, இந்த பாராளுமன்றத்திலே; சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பம் சுதந்திரத்திற்குப் பிறகு, அதாவது 69 வருடங்களின் பின்னரே எமக்குக் கிடைத்துள்ளது.

இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும். எமது நோக்கமும் எதிர்ப்பார்ப்பும் இந்த புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் எதிர்பார்க்கும்  இந்த இலக்கை அடைவதற்கும் அரசியலமைப்பு சபை என்ற வகையிலே ஒன்று கூடுவதற்கும்  எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
நாங்கள் கடந்த காலங்களில் அரசியல் இலாபத்திற்காகவும், சந்தர்ப்பவாதத்திற்காகவும் செயற்பட்டதன் காரணமாக எமது சமாதானத்திற்கான அரசியல் இலக்கை எம்மால் அடைய முடியாமல் போனது. இது வௌ;வேறு அரசியல் கொள்கைகளையுடைய  தலைவர்கள் ஒன்றிணைந்து இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை வழங்கக்; கூடிய புதிய அரசியல் அமைப்பை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இத்தகைய சந்தர்ப்பம் இன்று தான் கிடைத்திருக்கிறது. இதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக கொள்ள முடியும். அதுபோல இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த ஒற்றுமையான, சமாதானமான சூழ்நிலையை விரும்பாதவர்களும் இருக்கின்றார்கள்.  அதனால்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை துரோகி என்று திட்டுகிறார்கள். ஜனாதிபதி அவர்களை துரோகி என்று திட்டுகிறார்கள் சம்பந்தன் ஐயா அவர்களை இனத்துரோகி என்று திட்டித் தீர்க்கின்றார்கள்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை விரும்பாத இவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் காரணத்திற்காக பாராளுமன்றத்திற்கு குண்டு வைக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். இந்த இனவாதிகளின் வாயிலிருந்து வெளிவரும் மோசமான வார்த்தைகளிலிருந்து இவர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையையும், சகவாழ்வையும் விரும்பாத ஒரு கூட்டம் என்பது தெளிவாகிறது.
இன்று தெற்கிலே இருப்பது போல வடக்கிலும் இனவாதிகள் இருக்கின்றார்கள்.

மனிதாபிமானத்திற்கு எதிராக இந்த இனவாதிகள் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். வடக்கிலே இருக்கின்ற இனவாதிகள் சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாக குற்றம் சாட்டும் அதே வேளை தெற்கிலே இருக்கின்ற இனவாதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிங்கள இனத்தைக் காட்டிக் கொடுத்து நாட்டை துண்டாடப் போவதாக புரளியைக் கிளப்புகிறார்கள். இந்த இனவாதக் கும்பல்கள் இரண்டும் இன்று ஒன்று சேர்ந்திருக்கின்றன. இந்த இனவாதக் கும்பல்களின் உள்நோக்கம் என்னவென்பதும் இவர்களின் நடவடிக்கைகளிலிருந்து எமக்கு நன்கு புரிகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்று சேரவிடாமல் பிரித்து வைப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

இந்த இனவாதிகள்தான் அன்று எஸ்.டப்லியூ.ஆர்.டீ. பண்டாரநபயக்காவின் உயிருக்கு உலை வைத்தவர்கள். அதே இனவாதிகள் இன்று மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து குண்டு வைக்க வேண்டும், சுட்டுக்கொல்ல வேண்டும் என்றெல்லாம் கோஷமிடுகிறார்கள். அன்று எஸ்.டப்லியூ.ஆர்.டீ பண்டாரநாயக்கா அவர்கள் இந்த நாட்டின் நலனையும் எதிர்கால சந்ததியினரின், சமாதானத்தையும் வாழ்வுரிமையையும் கருத்திற் கொண்டுதான் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்தார். அன்று அதற்கு எதிராக எழுந்த இனவாதிகள் அவரை சுட்டுக்கொன்றார்கள். அதே இனவாதக் கும்பலின் வழித்தோன்றல்கள் தான் இன்று மீண்டும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இனவாதக் கும்பல்கள்; நாட்டைத் துண்டாடப் போவதாகவும், இந்த நாட்டை அழிக்கப்போவதாகவும,; நாட்டின் இறைமையை இல்லாமலாக்கி விடப் போவதாகவும் பொய்யான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கின்றன. இதுபோலவே வடக்கில் இருக்கின்ற இனவாதக் கும்பல்களும் புதிய அரசியல் யாப்பின் மூலமாக தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்று இனவாதம் பேசிக்;கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டு இனவாத பழங்குடி கோத்திரக் கும்பல்;களும் ஒன்றிணைந்து முழுநாட்டு மக்களையும் இனமத பேதத்தால்  துண்டாடி மீண்டுமொரு முறை அழிவுப் பாதைக்கு இந்த நாட்டை இட்டுச்செல்ல முற்படுகின்றன. இந்த சக்திகள் தான் அன்று மாகாண சபை உருவாக்கப்பட்ட போது நாடு பிரிக்கப்படுவதாக மக்களை குழப்பின. இன்று மாகாண சபையிலே அமைச்சுப் பதவிகளைப் பெற்று அதன் உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதும் இந்த சக்திகளே.
நான் சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநிதித்துவம் படுத்துபவன் என்ற வகையில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அன்று சித்தி லெப்பை, ரீ.பி.;ஜாயா வாப்பிச்சி மரிக்கார், ஏ.சி.எஸ். ஹமீத் போன்ற எமது முஸ்லிம் தலைவர்கள் இன்று நாங்கள் முன்வைக்கின்ற கருத்தையே கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த நாட்டிலே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்போடு, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பரஸ்பர நம்பிக்கையோடு இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வாழ்வதற்குரிய அரசியல் யுகமொன்றை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள்.

இன்று அதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரே புள்ளியில் இணைந்திருக்கின்றன. இந்த விடயத்திலே பல ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களை கொண்டவையாக செயற்பட்டிருந்தன. இந்த நிலைமையில் செயற்பட்டால் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என்ற யதார்த்தத்தை இரண்டு கட்சித் தலைவர்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டை சர்வதேச ரீதியிலே மனித உரிமைக்கு மதிப்பளிக்கின்ற ஒரு நாடாகவும், சமூக ஒற்றுமை மிளிர்ந்த நாடாகவும், சீரிய பொருளாதாரத்தை உடைய நாடாகவும் மேம்படுத்த வேண்டுமென்றால் நாங்கள் மாற்றத்தை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டும் என்று இந்த இரண்டு தலைவர்களும் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அதன் பிரதிபலனாகத்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து ஏகமனதாக தீர்மானித்து, சகல கட்சிகளையும் இணைத்து முழு பாராளுமன்றத்தையும் ஓர் அரசியல் அமைப்புச் சபையாக மாற்றி, ஒரு புதிய அரசியல் அமைப்பிற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்கள்.

தென் ஆபிரிக்காவிலே ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்த்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டும்  ஒருவரை ஒருவர் கொலை செய்துக்கொண்டும்,  கறுப்பர், வெள்ளையர் இனத்தவர்கள் இன்று ஒன்றிணைந்திருக்கிறார்கள். அப்படியானால் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரே நாட்டுக்குள் வாழ்கின்ற நாங்கள்; ஏன் ஒன்றுபட முடியாது? ஆகவே ஒரு சிலர் செய்கின்ற குப்பைத் தொட்டி அரசியலை நாங்கள் நிராகரிக்க வேண்டும். ஆகவே அவர்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம் இந்த குப்பைத் தொட்டி அரசியலிலிருந்து மீண்டு வெளியே வாருங்கள். மனிதாபிமானத்திற்காக அரசியல் செய்யுங்கள். தேசிய கீதத்தில் பாடும் சகலரும் ஒரு தாய் மக்கள் எனும் வார்த்தைகள் வெறும் வசனங்களாக மட்டும் இல்லாமல் எமது இதயத்திலிருந்து வெளிவரும் வார்த்தைகளாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் சாந்தியும் சகவாழ்வும் மலரும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.

Related posts

மன்னார் சவேரியார் கல்லூரியின் 150 வருட பூர்த்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

wpengine

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை – சட்டமா அதிபர்!

Editor

நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவம்

wpengine