தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான அல்ஜசீராவின் நிகழ்ச்சி நிரலுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரை காட்டிக் கொடுக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அல்ஜசீரா செய்தி சேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக, இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளை குற்றவாளிகளாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்தது. அவ்வாறான அல்ஜசீராவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
30 ஆண்டுகளாகியும் கவனத்தில் கொள்ளாமலிருந்து பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை கண்களில் கண்ணீர் மல்க அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதனைக் கேட்டு சபாநாயகரும் கண்ணீர் வடிக்கின்றார். தமது தலைவர் ரோஹண விஜேவீரவை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. கூறவில்லை.
காலத்துக்கு தேவையற்ற ஆனால் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியவற்றையே தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சாதகமாக செயற்பட்டு, நாட்டின் இராணுவ வீரர்களையும், போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படையினரையும் சர்வதேசத்தின் மத்தியில் காட்டிக் கொடுப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1971ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு சிவில் யுத்தத்துக்கு வழியமைத்தது ஜே.வி.பி.யே. ரோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. ஜனநாயக ரீதியில் அன்றி அராஜகமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு நாட்டில் வன்முறைகளைத் தூண்டியது. அவ்வாறானவர்கள் தான் இன்று பட்டலந்த அறிக்கைக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்றார்.