Breaking
Sat. Nov 23rd, 2024

நாட்டின் அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதவல்ல ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தெரியாமல் அரசாங்க கூட்டத்திற்கு தமது உறுப்பினர்களை அழைப்பது பொருத்தமற்றது என அக்கட்சியின் தலைவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான விசேட கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்படி இனிமேல் அரசாங்கத்தின் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை அழைப்பதாயின் அதனை முதலில் கட்சிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியுடன் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

A B

By A B

Related Post