எமது தாய் நாடு ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளது. புதிய ஒரு மாற்றம் எப்போது இடம்பெறும் என்ற விழிப்புணர்வுடன் மக்கள் இருக்கின்றார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்றையதினம் விசேட உரை ஒன்றை ஆற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பாகங்களில் நான் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். அந்த சந்தர்ப்பத்தில் நாட்டிலுள்ள பல்வேறு தரப்பு மக்களுடன் நான் கலந்தோலோசித்தேன்.
அதன்போது நான் தெரிந்து கொண்ட விடயம் என்னவென்றால் எமது தாய் நாடு ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளது. புதிய ஒரு மாற்றம் எப்போது இடம்பெறும் என்ற விழிப்புணர்வுடன் மக்கள் இருக்கின்றார்கள்.
எமது நாட்டில் காணப்பட்ட குடும்ப ஆட்சி, நண்பர்களுக்கிடையிலான ஆட்சி, ஊழல் மோசடி கொண்ட அரசியல் போன்றவற்றை இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.
இலங்கையின் நாலா பக்கத்திலும் இருக்கின்ற மக்கள் என்னுடன் இணையும் பொழுது, பெண்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் என்னிடம் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
என்னிடம் சந்தர்ப்பங்களை வழங்குவீர்களா என கேட்டார்கள். எவ்வாறான தொழில் எங்களுக்குக் கிடைக்கும்? எமது செலவுகளை குறைத்து பொருளாதார ரீதியாக நாம் முன்னேறுவதற்கான திட்டங்கள் எதுவும் இருக்கின்றதா? என கேள்விகள் கேட்டிருந்தார்கள்.
அதேபோல விசேடமாக மற்றுமொரு கேள்வியை கேட்டிருந்தார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்கள் எம்மை மீண்டும் ஏமாற்றி விடுவார்களா? அவர்கள் அவர்களுடைய பழைய பழக்கத்திற்கு அமைய நாட்டை சூரையாடிவிடுவார்களா? ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு உங்களிடம் இருக்கும் வேலைத்திட்டம் என்ன? அதற்கு எவ்வாறு நீங்கள் சான்று அளிப்பீர்கள் என கேட்டார்கள்.
அதேபோல நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பது குறித்து அவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். அவற்றை மாற்றியமைப்பது எவ்வாறு என்பதை நான் புரிந்து கொண்டேன்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழுவினை நியமித்தல், அமர்ந்திருத்தல், வாக்குறுதிகளை வழங்குதல், அதிகமாக பணம் செலவிடுவது மூலம் பறந்து காணப்படும் இந்த ஊழல் மோசடி என்பதை இல்லாதொழிக்க முடியாது.
அதற்கான தீர்வானது அரசியலில் ஈடுபடுபவர்களையும் அவர்கள் எவ்வாறு ஈடுபடுகின்றார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
எமது மக்கள் வெயிலிலும், மழையிலும் இயற்கையின் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்திருக்கின்றார்கள். அதே போல எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத பொருளாதார முறையால் மேலும் பாதிக்கப்படுகின்றார்கள்.
அதனாலேயே அவர்கள் வறுமையிலும் வேதனையிலும் வாடுகின்றார்கள். மக்கள் இவ்வாறு இருக்க குடும்ப அரசியல்வாதிகளும் நண்பர்களுக்கிடையிலான அரசியலையும் இன்பத்தில் இருக்கும் துஷ்டர்களாகவே நான் கருதுகின்றேன்.
அவ்வாறான ஆட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும். அதனை உங்களாலேயே செய்ய முடியும். எதிர்வரும் 16ஆம் திகதி உங்களுடைய பொன்னான வாக்கின் மூலம் இந்த ஊழல் நிறைந்த அரசியலை ஒழித்துக் கட்ட முடியும் என்பதே எனது நம்பிக்கை.
அதன்மூலம், மக்களின் விருப்பு, வெறுப்பை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறான மாற்றத்தை கொண்டு வரலாம். நான் உங்களது சர்வாதிகாரி அல்ல. உங்களுடைய தலைவனே. அதேபோல உங்களுடைய சேகவனும் ஆவேன். எனவே நான் உங்களுக்கு வாக்குறுதி வழங்குகின்றேன் உங்களுக்கு சேவை செய்ய நான் பாடுபடுவேன்.
அதேபோல வன்முறைகள் மூலம் பதவியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் சர்வாதிகார அரசியலை இல்லாமல் செய்ய வேண்டும். இது அனைத்திற்கும் பின்னால் இருக்கும் பதவி பேராசை பிடித்தவர்களை துரத்த வேண்டும்.
இலங்கை புவியியல் ரீதியாக சிறந்த ஒரு அமைவிடத்தில் உள்ளது. அதேபோல சிறந்த வளங்களைக் கொண்ட நாடாகும். அதேபோல பல தகுதிகளைக் கொண்ட மக்கள் உள்ள நாடாகவும் இலங்கை உள்ளது.
அரசியல் பேராசை பிடித்த ஒரு சிறிய குழுவுக்காக இந்த நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. இந்த நாட்டை திறன் மிக்க பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த பாதுகாப்புடைய ஒரு நாடாக மாற்றுவது எனது குறிக்கோளாகும்.
பௌத்தராக இருக்கட்டும், இந்துவாக, முஸ்லிமாக, கிறிஸ்தவராக இருக்கட்டும் நம் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது இந்த அரசியலே.
அவற்றில் இருந்து உங்களை மீட்டுக்கொள்வதே எனது பொறுப்பாகும். ஒரு முறை புத்த பகவான் இவ்வாறு போதித்துள்ளார்.
நாட்டின் தலைவர் நேர்மையாக இருந்தால் அவரது அமைச்சும் அமைச்சர்களும் நேர்மையாக இருப்பார்கள்.
அமைச்சர்கள் அவ்வாறு இருக்கும்பொழுது அரச ஊழியர்களும் அவ்வாறே இருப்பார்கள். அதன் மூலம் முழு நாட்டு மக்களும் நல்ல பண்புள்ளவர்களாக காணப்படுவார்கள்.
நாட்டின் முதற்குடிமகன் பதவியே ஜனாதிபதி பதவியாகும். அந்த பதவியை வகிப்பதற்கு முன்னரே அரசியல் பேராசையை பிடுங்கி வீசிவிட்டு நாட்டுக்கு முன்மாதிரியான ஜனாதிபதியாக செயற்படுவது என்பதை உறுதியளிக்கின்றேன்.
நான் இந்த தீர்மானங்களை தன்னிச்சையாக ஒரு சர்வாதிகாரியாக எடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின்போது சிறந்த தலைவர்கள் அரசியல்வாதிகள் இளைஞர் யுவதிகள் என பல்வேறுபட்டவர்கள் உடந்தையாக இருந்தார்கள்.
நான் எனது அமைச்சர்களுக்கு அவர்களுடைய அதிகாரங்களை உபயோகித்து வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இடமளிக்க மாட்டேன்.
அதேபோல எனது அமைச்சர்களது உறவினர்களைக் கொண்டு அரச நிறுவனங்களில் தொழில் வழங்க மாட்டேன்.
நான் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சரியாக சமர்ப்பிக்கும் இளைஞர்களையே எனது அமைச்சரவையில் வைத்துக் கொள்வேன்.
அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவினை நியமிப்பேன்.
ஊழல் வாதிகளுக்கும், வன்முறையாளர்களும், கடும் போக்காளர்களும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் எந்த விதமான மன்னிப்பும் வழங்க மாட்டேன். அவர்களுக்கு எதிராக கடும் தண்டனையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றவரையே எனது அரசாங்கத்தில் பிரதமராக நியமிப்பேன்.
எனது ஆட்சியில் புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும்.
எனது அமைச்சரவையில் இருக்கும் உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் வழங்குதல், பாதுகாப்பு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளின் போது சிந்தித்து செயற்படுவேன்.
பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள், சூத்திரதாரிகள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுவினர் அவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.