நாடாளுமன்றம் கூட்டப்படும் தினத்தில் ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்படுவதாகவும், மக்களின் பணம் செலவு செய்து நடத்தும் நாடாளுமன்றம் தற்போது மிகவும் கீழ் நிலைக்கு சென்றுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நிலைமை இப்படி சென்றால், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் அருவருக்கும் இடமாக நாடாளுமன்றம் மாறியுள்ளது. இந்த நிலைமைக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் புதிய உறுப்பினர்கள் பொறுப்புக் கூறவேண்டும்.
அரசியல் அலைக்காரணமாகவே பல புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு நாட்டின் அரசியல் குறித்தோ, ஒழுக்கம் பற்றியோ புரிதல் இல்லை. இதனால், நாட்டின் அதியுயர் பீடமான நாடாளுமன்றம் மிகவும் தாழ்நிலைக்கு சென்றுள்ளது.
எனது நாடாளுமன்ற வரலாற்றில் நாடாளுமன்றம் இப்படி கீழ் நிலைமைக்கு சென்றதில்லை. தற்போது நாடாளுமன்றத்திற்குள் யார் திருடன் என்று கத்துகின்றனர். இரண்டு தரப்பினரும் திருடன் திருடன் என்று கத்துகின்றனர். இரண்டு தரப்பினரும் திருடர்கள் என மக்கள் உணர்ந்துக்கொள்வார்கள்.
நாட்டில் இருக்கும் இந்த மோசடியான அரசியலை ஒழிப்பதற்காக ஜனாதிபதிக்கு விசேட பொறுப்பை செய்துள்ளார். ஜனாதிபதியின் இந்த பணியால் சிலருக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
எனினும் நாட்டின் எதிர்காலத்திற்கு ஜனாதிபதியின் இந்த பணித் தொடரும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.