உயரிய இலட்சியங்களை வெல்வதற்காக இறைதூதர் இப்ராஹிமின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள், சவால்களை எதிர்கொள்வதற்கான தைரியங்களைத் தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இறைதூதர் இப்ராஹிமின் இலட்சியங்கள், மனித வர்க்கத்துக்கு சிறந்த வழிகாட்டல்களாக உள்ளன. இடப்பெயர்வும் தியாகமும் என மிகப் பெரிய சவாலை வெற்றிகொண்ட நாகரீகங்களின் நாயகனாகவே இறை தூதர் இப்ராஹிம் திகழ்கிறார்.
ஏகத்துவத்தை நிலைநிறுத்த அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தியாகங்களை யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. இஸ்லாம் இவரது குடும்பத் தியாகங்களை மார்க்கமாக்கி, ஹஜ்ஜை புனித கடமையாக்கியுமுள்ளது.
ஒரு குடும்பத்தின் முன்மாதிரிகள், உலகில் பல நாகரீகங்களையே தோற்றுவித்திருக்கிறது. இத்தகைய குடும்பத்தினராக வாழ்வதற்கு, நாம் இந்நாளிலிருந்தாவது முயற்சிக்க வேண்டும். உழ்ஹிய்யா கடமையாக்கப்பட்டுள் நாட்களில், முஸ்லிம்கள் நடந்துகொள்ளும் விதம், ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக அமையட்டும்.
மனித வாடையே இல்லாத பண்டைய காலத்து மக்கா பாலைவனத்தில், அன்னை ஹாஜராவும் பாலகர் இஸ்மாயீலும் கற்றுக்கொண்டவை ஏராளம். இவர்களது தைரியம்தான், இன்று நாகரீகமாக பரிணமித்துள்ளது.
இறைவனின் ஏவல்களை எடுத்தியம்பிய இக்குடும்பத்தவர்களின் பக்குவம் வாழ்நாள் வரலாற்றுச் சான்றாகி உள்ளது.