மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு தேர்தல் களத்தில் நடக்கும் அடுத்தடுத்த சோதனைகளால் அதிர்ந்து போயிருக்கிறது தி.மு.க.’மக்களிள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை’ எனத் தெறித்து ஓடுகிறார்கள் உடன்பிறப்புகள்.
சட்டமன்றத் தேர்தலில் கப் – சாசர் சின்னத்தில் போட்டியிடுகிறது மனிதநேய மக்கள் கட்சி. கடந்தமுறை அ.தி.மு.க அணியில் நின்று வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா, இந்தமுறை தி.மு.க அணியில் போட்டியிடுகிறார். கடந்த ஐந்தாண்டுகளில் ராமநாதபுரத்திற்கு பெரிதாக அவர் எதுவும் செய்யவில்லை என்ற கோபம் தொகுதி முழுக்க நிரம்பி இருக்கிறது. எதிரணியில் போட்டியிடும் அ.தி.மு.க மணிகண்டனுக்கும், தே.மு.தி.கவின் சிங்கை ஜின்னாவுக்கும் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றாலும், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது ம.ம.க.
இதுபற்றி நம்மிடம் பேசிய ராமநாதபுரம் தி.மு.க நிர்வாகி ஒருவர், ” கடந்தமுறை வெற்றி பெற்ற பிறகு, நன்றி சொல்லக்கூட ஜவாஹிருல்லா வரவில்லை என மக்கள் கோபப்படுகிறார்கள். நகரின் போக்குவரத்து நெருக்கடி, அடிப்படை வசதியின்மை, சரியான சாலைகள் இல்லாதது போன்ற பிரச்னைகளை அவர் தீர்க்கவில்லை என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.